காத்மண்டில் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்ற விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 139 பேர் .

நேபாளத்திலிருந்து மலேசியா செல்லும் மலிண்டோ ஏர்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலிண்டோ ஏர்ஜெட் பயணிகள் விமானம் 135 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓடுபாதையிலிருந்து விலகி புற்தரைக்குள் சென்றது. இதனால் விமானத்தின் டயர் மண்ணிற்குள் மாட்டிக்கொண்டது. பிரச்சனை ஏற்பட்டதை தெரிந்து கொண்ட விமானி கடைசி நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்திற்கு வேறு எந்த சேதமும் ஏற்படாததால் விமான ஊழியர்கள் உட்பட 139 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விபத்து ஏற்பட்டதால் விமான நிலையம் 12 மணி நேரம் முடங்கியது. பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். சீரமைப்பு பணி முடிவடைந்த பின் விமான போக்குவரத்து இன்று காலை முதல் தொடங்கப்பட்டது.