கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் ரணில் .

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பத்து நிபந்தனைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஒப்புதலை வழங்கியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த நிபந்தனைகளில் “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம்” முக்கியமானது எனவும் அவர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “பிரதமரின் இந்த நடவடிக்கை நாட்டை பிளவுப்படுத்தும் அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்க முன்னுரிமை கொடுப்பதன் மூலம் நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரதமருக்கும், தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கும் இடையில் வலுவான உறவு காணப்படுகின்றது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தமையின் மூலம் அது உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்றில் பிரததான எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தமை அவமானமான செயல். மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனவே, பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் எதிர்காலத்தில் பிரதமரின் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அனைவரும் நேர்மையானவர்கள் இல்லை. நாடாளுமன்றில் நேர்மையான அரசியல் வாதிகள் இருந்திருந்தால், பிரதமரை நீக்கியிருக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டடமைப்பு 10 நிபந்தனைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.