News

கூட்டு அரசின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு ஏமாற்றம் தான்!

நல்லாட்சி அரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. தெற்கின் அரசியல் சூழ்நிலை இதைக் கட்டியம் கூறி நிற்கின்றது. இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் தமிழர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். பெரிய கட்சிகள் இரண்டும் ஒன்றிணையும் போது தமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமென அவர்கள் நம்பினர். ஆனால் நிலைமை வேறாகக் காணப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தாமே போட்டியிடப் போவதாக மைத்திரிபால சிரிசேன கூறியதாகச் செய்திகள் வௌிவந்துள்ளன. அண்மையில் இலண்டனுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர் அங்கு வைத்தே இவ்விதம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது உண்மையாக இருக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை அவர் நிரந்தர மாகவே துண்டிக்கப் போகிறாரென அர்த்தம் கொள்ள முடியும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பிரதமர் பதவியிலிருந்து விலகி விடுமாறு ஜனாதிபதி பிரதமரைக் கேட்டுக் கொண்ட போது பிரதமர் அதை முற்றாகவே நிராகரித்து விட்டார். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பிரதமருக்குச் சாதகமாக அமைந்து விட்டதால், ஜனாதிபதி சிரமத்துக்கு உள்ளாக நேரிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மகிந்த அணியும் இணைந்து ஆட்சியை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை வகித்திருந்த போதிலும், அரசிலிருந்து வௌியேறியிருந்தனர். இவர்களை மீண்டும் அரசில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் ஐ. தே. க தரப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகளை வழங்கினால் தாம் அரசிலிருந்து விலகி விடுவதாக அமைச்சர் காமினி பொன்சேகா கூறுமளவுக்கு எதிர்ப்பலைகள் அங்கு உருவாகியுள்ளன. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அந்தக் கட்சியிலிருந்து விடுக்கப்பட் டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இன்றைய நல்லாட்சி அரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுகின்றது.

ஜனாதிபதி, கட்சி, ஆட்சி என்ற இரண்டு படகுகளில் ஒரே வேளையில் பயணம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார். இதுவொரு இயலாத காரியமென்பதை அவர் நன்றாகவே அறிவார். ஆனால் நிர்ப்பந்தம் காரணமாக அவர் அதைச் செய்வதற்கு முற்படுகின்றார். தெற்கைப் பொறுத்தவரையில் மூன்று பிரதான அரசியல் சக்திகள் காணப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவருமே அந்த மூன்று சக்திகளாகும்.இவர்கள் மூவரும் மூன்று அரசியற் கட்சிகளின் தலைவர்களாகவும் உள்ளனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனால் மொத்த வாக்குகளில் 44.69 வீதமானவை மட்டுமே மகிந்தவுக்கு அளிக்கப்பட்டவை. சுமார் 55.31 சதவீதமான வாக்குகள் ஏனைய கட்சிகளுக்குக் கிடைத்தன. இதனால் மகிந்த தரப்பின் வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் அரசியல் தீர்வைப் பெறும் பொருட்டு தமிழர் பகுதிகளில் அரச நிர்வாகத்தை முடக்கும் வகையிலான போராட்டங்கள் இடம்பெறவிருப்பதாக கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர்களின் போராட்டம் அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தமை, இந்த நாட்டின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாகவே அமைந்து விட்டது. பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணுமென தமிழர் தரப்பு பெரும் நம்பிக்கையைக் கொண்டிருந்தது.தமது வாக்குப் பலத்தால், ஆதரவால் ஆட்சிக்கு வந்தவரே ஜனாதிபதி என்ற உரிமையையும் தமிழ் மக்கள் கொண்டிருந்தனர்.

ஆனால் இறுதியில் எல்லாமே ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீண்டுமொரு தடவை தமது உண்மையான முகத்தைக் காட்டிவிட்டனர். தமிழர்களின் பிரச்சினைக ளுக்குத் தீர்வைக் காண்பதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கின்ற தமிழர் ஒருவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதையே தமது பிரதான இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். இந்த நிலையில் நாட்டில் இன ஐக்கியத்தையும், சகவாழ்வையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top