News

கோத்தாவை கைது செய்யக் கோரி கொழும்பில் போராட்டம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைக்கு முழுக்காரணமாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யக் கோரி கொழும்பில் இன்று அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு தயக்கம் காட்டி வரும் அரசாங்கம், அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சியா அதற்கு காரணம் என்றும் அருட்தந்தை சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடை சிறையில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றது. இந்த வழக்கில் பிரதான சந்தேக நபராக காணப்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நியூமல் ரங்கஜீவ, படுகொலை இடம்பெற்றபோது சிறைச்சாலை ஆணையாளராக இருந்த எமில்ரஞ்ஜன் லமாஹேவா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டபோது அவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் மே 8ஆம் திகதிவரை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வெலிக்கடை படுகொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுவரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் கைது செய்யும்படியும், படுகொலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறும் கோரி கொழும்பு மேலதிக நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று பகல் அமைதிப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம், சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு என்பன இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்கள் பலரும் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் சுலோகங்களை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top