News

சம்பந்தனுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி .

“சிங்கள மக்களின் மனங்களை வெல்லக்கூடியதும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் திருப்தியையும் கருத்திற்கொண்டே எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தீர்வைக் கோருகிறார். அந்தவகையில் அவரது எதிர்பார்ப்பை வரவேற்கிறோம். அனைவரையும் திருப்திப்படுத்த நினைக்கும் அவருக்கு எமது நன்றிகள்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் தமது முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். எனவே நாடாளுமன்றமே புதிய அரசியல் அமைப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும்.

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலேயே அனைவரும் இப்போது பேசுகின்றனர். நான் அதற்கு ஆதரவு வழங்கியதாக சிலரும், ஆதரவு வழங்கவில்லை என சிலரும் கூறுகின்றனர். ஆகையால் என்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.

“பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், சில கட்சிகள் தங்களுக்குப் பலம் கிடைத்துவிட்டதாகக் கருதினர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எந்தவொரு கட்சியும் 40 சதவீதத்துக்கு மேல் வாக்கினைப் பெறவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமார் 15 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. எமக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் சுமார் 30 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். “நிலைமை இவ்வாறிருக்கையில், தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் தாங்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.

இதேவேளை, பொது எதிரணியில் இருப்பவர்கள் என்னை சந்திக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கைக்கிணங்க, அவர்களைச் சந்தித்தபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாகவும், அதனூடாக பிரதமர் பதவியைத் தமக்குத் தரவேண்டும் எனவும் கோரினர்.

“பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா இல்லையா என்று நாடாளுமன்றத்தில் நிரூபியுங்கள் என்று கூறினேன். அதற்கான பிரதிபலன் எவ்வாறு அமைந்தது என்பது யாவரும் அறிவீர்கள். நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிரதமர் வெற்றிகொண்டதன் பின்னர் தனியாட்சி சாத்தியமா எனக் கேட்கின்றனர்.

என்னைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடையாது ஆகையால் கூட்டாட்சி ஒன்றே சாத்தியமானது. எனவேதான், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்கின்றோம். நாட்டினுடைய எதிர்காலம் கருதி, வலுவான ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top