சிரியா தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய ஏவுகணை இதுதான்:

உலக நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்திய சிரியா தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய ஏவுகணை தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியா மீதான அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு உலக நாடுகளிடம் எதிர்ப்பும் ஆதரவும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், குறித்த அதிரடி தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய ஏவுகணை தொடர்பில் அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் உள்ள ரசாயன ஆலைகளை அழிக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது. குறித்த தாக்குதலில் AGM-158B JASSM-ER என்ற அதிநவீன ஏவுகணையை அமெரிக்கா முதன் முறையாக பயன்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ராணுவத்தில் குறித்த ஏவுகணையானது செயற்பாட்டில் இருந்தாலும் இதுவரை எந்த தாக்குதலுக்கும் குறித்த ஏவுகணையை பயன்படுத்தியதில்லை.
குறித்த ஏவுகணையானது 600 மைல்கள் தொலைவில் இருந்து ஏவினாலும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. சிரியா மீதான தாக்குதலில் மொத்தம் 85 ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இதில் 19 AGM-158B JASSM-ER என்ற அதிநவீன ஏவுகணையும் அடங்கும். மட்டுமின்றி 3 போர் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் மற்றும் B1-B ரக போர் விமானங்களையும் குறித்த தாக்குதலுக்காக அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் ரஷ்யாவின் மிகவும் ஆபத்தான S-400 ஏவுகணை எதிர்ப்பு கவசத்தில் சிக்காமல் தப்பும் வகையில் குறித்த ஏவுகணையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு AGM-158B JASSM-ER ஏவுகணையை தயாரிக்க அமெரிக்க அரசு சுமார் 1.4 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. சிரியாவில் பயன்படுத்திய 19 ஏவுகணைகளின் மொத்த மதிப்பு 27 மில்லியன் டொலர்.
சிரியா தாக்குதலுக்கு அமெரிக்கா மட்டும் 85 ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானியா 8 ஏவுகணையும், பிரான்ஸ் 12 ஏவுகணை என மொத்தமாக 105 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவியுள்ளனர். இதில் 70 ஏவுகணைகளை சிரியாவில் உள்ள ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசாத் தலைமையிலான அரசு அங்குள்ள பொதுமக்கள் மீது நச்சு வாயு தாக்குதலில் ஈடுபட்டதில் அப்பாவி மக்கள் 75 பேர் கொத்தாக கொல்லப்பட்டதை அடுத்தே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை சிரியா மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.