News

சிறிலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்க : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

சிறிலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்க : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயலாக்கும் வரை, பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநீக்கம் செய்யுமாறு பொதுநலவாய அரசுத்தலைவர்களிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா அதனைச் செய்யத் தவறினால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

போரின் போது தாம் செய்த பல குற்றங்களுக்கும் பொறுப்பேற்றிருப்பது போலவும், இனியும் பொறுப்பேற்கப் போவது போலவும் பன்னாட்டுச் சமுதாயத்தை நம்ப வைத்துத் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானப் பரிந்துரைகளைச் செயலாக்குவது குறித்து சிறிலங்காவின் ஆமைவேக முன்னேற்றம் தொடர்பாகத் திரும்பத் திரும்பக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராண்டுக் காலநீட்டிப்பு தரப்பட்ட போதிலும் 2017 மார்ச்சுக்கும் 2018 சனவரிக்கும் இடையே பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. ஐநா மனிதவுரிமைப் பேரவையின் பரிந்துரைகளை சிறிலங்காவால் 2019 மார்ச்சுக்கு முன் செயலாக்க இயலுமா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. ஆனால், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது, அதனிடம் போதிய உறுதியில்லை என்றாலும், இந்த உறுதிப்பாடுகளை நிறைவு செய்யத் தவறினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பெரிதாக அதரகு உணர்த்தப்படவில்லை.

சிறிலங்கா தானே ஏற்ற உறுதிப்பாடுகளை நிறைவு செய்ய உள்ளபடியே விரும்புகிறதா என்பது குறித்துப் பலரும் கவலை தெரிவித்திருந்தும் கூட, காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் ‘காமன்வெல்த் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் காவலனாக’த் திகழ்கிறது என்று கருதப்பட்டாலும் கூட, ஈராண்டுக்கொரு முறை நடைபெறும் அந்தக் கூட்டத்தை 2013ஆம் ஆண்டு கொழும்பு முன்னின்று நடத்த அனுமதிக்கப்பட்டது.

போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்செயலும், தொடர்ந்து இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து வரும் தமிழர் தாயகத்தில் கட்டமைப்பியல் இனவழிப்புக் குற்றமும் புரிந்ததாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஓர் அரசுடன் கைகுலுக்கியதால் காமன்வெல்த் சிறிலங்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் தன் நம்பகத்தன்மையை விட்டுக் கொடுத்து விட்டது.

பல்வேறு வழிகளிலும் தெட்டத் தெளிவான சான்றுகள் வந்து குவிந்துள்ள போதிலும், தப்பே செய்யவில்லை என்று மறுத்து வருகிறது சிறிலங்கா. இந்த வகையில், அப்போதைய ஐநா பொதுச் செயலர் பான் கி-மூன் அமர்த்திய வல்லுநர் குழுவின் அறிக்கை, ஐநா உள்ளக ஆய்வறிக்கை (‘சார்லஸ் பெற்றி அறிக்கை’), டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் கண்டறிந்தவை, சேனல் 4 படைத்த சூடுமறுப்பு வலையம் (நோ ஃபயர் ஸோன்) ஆவணப் படம், பற்பல சிறப்பு அறிக்கையாளர்களும் பன்னாட்டு அரசுசாரா அமைப்புகளும் அளித்துள்ள அறிக்கைகள்… போன்ற பல சான்றுகளைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் 2009ஆம் ஆண்டு ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களிலும் கூட சிறிலங்கா அரசாங்கம் கொடிய போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் செய்திருப்பதை நிறுவியுள்ளன.

பன்னாட்டுச் சமுதாயம் சிறிலங்காவின் ஏமாற்றுச் செயல்களை உணர்ந்து விட்டது என்பது அண்மையில் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் செய்து ராது அல் உசைனும், துணை உயர் ஆணையர் கேத் கில்மோரும் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடைபெற்ற 1974ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பொதுநலவாய மாநாட்டுப் பேராளர்களுக்கு அளித்த விண்ணப்பம் தமிழர்களுக்கு எதிரான இனப் பாகுபாட்டையும் இனவதையையும் எடுத்துரைத்தது.

‘இலங்கைத் தமிழர்களின் சிக்கல்களை இந்த மாநாட்டில் கூடியுள்ள பேராளர்கள் பரிவுடன் கருதிப் பார்ப்பார்கள் என்றும், சிக்கலின் தீர்வுக்குத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள் என்றும் நம்புகிறோம்.’ என அந்த விண்ணப்பம் இறுதியாக சொல்லியிருந்தது. ஆனால் இன ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்றுள்ள பொதுநலவாயம் 1974ல் பாராமுகம் காட்டிப் போனது.

அன்று தொடங்கி, சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையிலும் பரவலாகவும் இனக் கண்ணோட்டத்தில் தமிழர்களின் மனிதவுரிமைகளைத் தொடர்ந்து மீறியுள்ளது. போரில் பல உயிர்களும் உடைமைகளும் பறிபோயின. சுதந்திரமும் நீதியும் வேண்டி நிற்கும் தமிழர்களின் துயரம் இன்றும் தொடர்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் உண்மையான உள்நாட்டுச் சூழல் குறித்துப் பன்னாட்டுச் சமூகத்தைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது:

1. கண்ணுக்கெட்டிய வரை நாட்டின் இனச் சிக்கலுக்கு எவ்விதத் தீர்வும் தென்படவில்லை.

2. சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் குறித்து ஐநா பொதுச்செயலரின் 2011 ஏப்ரல் அறிக்கையில் போர்க்குற்றங்களாகவும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களாகவும் இனங்காணப்பட்ட பற்பல குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்திடவோ ஐநா மனிதவுரிமைப் பேரவைத் தீர்மானங்கள் மீதோ அரசாங்கம் நம்பகமான நடைபடிகள் ஏதும் எடுத்தபாடில்லை.

3. சிறிலங்கா அரசாங்கம் உறுதியளிப்பது போன்ற நல்லிணக்கச் செயல்வழி எதுவும் மெய்ப்படக் காணோம்; அது தீர்மானப் பரிந்துரைகளுக்குச் செயல்வடிவம் தரத் தவறி விட்டது.

4. உள்நாட்டுப் போர் முடிவுற்றதிலிருந்து இராணுவ முகாம்களும் ‘உயர் பாதுகாப்பு வலையங்களும் தமிழர்களின் நிலப்பரப்பெங்கும் முளைத்துள்ளன. இராணுவம் குடியியல் ஆட்சியைக் கையிலெடுத்துக் கட்டுப்படுத்தி வருகிறது. அரசியல் கைதிகளும் போர்க் கைதிகளும் இன்றும் சிறையில் வாடுகின்றனர். தமிழர்களையே முதல் இலக்காகக் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கம் செய்யப்படவில்லை. காணாமற்போனவர்களின் பட்டியலும் கட்டாயக் காணாமலடித்தல்களின் பட்டியலும் இன்று வரை வெளியிடபப்டவில்லை.

5. இன்னுமொரு சிறுபான்மை மக்கள் சமுதாயமாகிய முஸ்லிம்கள் மீது தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பாராமுகம் காட்டியுள்ளது. சிங்களப் பேரினவாதிகளும் இனவெறியர்களும் முஸ்லிம்கள் மீது நேரடிக் கொடுந்தாக்குகள் நடத்தியுள்ளனர்; அவர்களின் உடைமைகளுக்குத் தீமூட்டியுள்ளனர்; தொழில்-வணிக நிறுவனங்களை அழித்துள்ளனர். அனைத்துலகச் சமுதாயம் கட்டிப் போடா விட்டால், இந்த ஆட்சி தன் சொந்த மக்களுக்குள்ளேயே சில பிரிவினர் மீது இனவழிப்பு வன்முறையில் ஈடுபடக் கூடிய ஒன்று என்பது வெள்ளிடைமலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top