India

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மந்திரி மேனகா காந்தி கூறியுள்ளார்.

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த ஆசிபா என்ற 8 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு அங்கு கோரிக்கை எழுந்துள்ளது.

இதைப்போல உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தன்னை பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். இந்த விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டதுடன், குல்தீப் சிங் நேற்று கைதும் செய்யப்பட்டார்.

இந்த கற்பழிப்பு சம்பவங்கள் வட மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய-மாநில (காஷ்மீர், உத்தரபிரதேசம்) அரசுகளை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, அவரது கணவர் வதேரா மற்றும் ஏராளமான காங்கிரசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்தியா கேட் பகுதியை நோக்கி மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் தனது கோஷமான ‘பேட்டி பச்சாவோ’ (பெண் குழந்தைகளை காப்போம்) என்ற வாக்கியத்தின்படி நடக்க வேண்டிய நேரமிது என்று கூறினார். மேலும் தன்னுடன் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் டுவிட்டர் மூலம் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தொடரும் குழந்தைகள் கற்பழிப்பால் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவங்களால் தான் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகி இருப்பதாக வீடியோ பதிவு மூலம் கூறியுள்ள அவர், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012-ல் திருத்தம் கொண்டுவர தானும், தனது அமைச்சகமும் பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.

இதைப்போல சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தியும் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறும்போது, ‘ஆசிபாவை போல மற்றொரு குழந்தைக்கு துயரம் ஏற்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குழந்தைகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். இதன்மூலம் சிறுமி ஆசிபாவின் துயரமே கடைசியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top