News

சிறைச்சாலைகள் முன்னாள் பிரதானி நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டாரா என விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த கொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறைச்சாலைகளின் பிரதானியாக இருந்தவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேக நபர்களாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ, அப்போது மெகசின் சிறையின் அத்தியட்சராக இருந்த தற்போதைய சிறைச்சாலைகள் சிறைச்சாலை ஆணையாளர்களில் ஒருவரான ( புனர்வாழ்வு) எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட கைது பட்டியலில் உள்ளதாக நம்பப்படும் மேற்படி பிரதானி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றது.

ஏற்கனவே சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்த போது, வெலிக்கடை சிறையில் அப்போது புலனாய்வு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட தற்போது மஹர சிறைச்சாலையின் இரண்டாம் நிலை உயர் அதிகாரியாக செயற்படும் இந்திக சம்பத்தும் தலைமறைவகையிருந்தார்.

சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் அவர் விடுமுறையில் இருந்ததுடன் அவர் இருக்கும் இடம் தொடர்பிலும் அறிய முடியாமல் இருந்தது. இந் நிலையிலேயே தற்போது சிறைச்சாலை படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக இருந்த பி.டி. கொடிப்பிலி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் மேற்படி இருவரும் வெலிக்கடை சிறைக் கலவரம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு மிக அவசியமானவர்கள் என தெரிவித்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப் பொருட்களை கைப்பற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் 2012.11.9 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளாந்த நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுத களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி அதில் இருந்த ஆயுதங்களை கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

நிலைமையானது இதன்போது பெரும் கலவரமாக மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

இந்நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுர்றிவளைத்துள்ளது.

இதன்போது 2009 நவம்பர் 9 ஆம் திகதி இரவு 12.00 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பககிச் சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச் செல்ல சிலர் முயன்றுள்ளனர். இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப்படை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலையீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின்னர் தெரிவு செய்யப்பட்ட 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்தப்பத்து,மொஹமட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன,அசரப்புலிகே ஜோதிபால,ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா, சுசந்த பெரேரா, கொண்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுப்பேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் உள்ளன.

சிறைக் கலவரம் அடக்கப்பட்ட பின்னர் அங்கு சிறைக்கு வந்ததாக கூறப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் மேலும் இருவர் இந்த கைதிகளை தெரிவு செய்ததாக சாட்சிகள் உள்ளன. ரங்க ஜீவ, எமில் ரஞ்சனுடனேயே சிறைக்கு வந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதனையடுத்தே பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ, சிறை அத்தியட்சர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top