சிறைச்சாலையை ஆயுதங்களுடன் தாக்கிய கும்பல்: பொலிசாருடனான மோதலில் 21 கைதிகள் பலி .

பிரேசில் நாட்டில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை மீட்க ஆயுதங்களுடன் சிறையைத் தாக்கிய கும்பலுக்கும், பொலிசாருக்கும் இடையிலான மோதலில் 20 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பிரேசில் நாட்டின் பாரா ஸ்டேட் மாகாணத்தில் Santa Izabel என்னும் பெரிய சிறைச்சாலை உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கைதிகள் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் ஆயுதங்களைத் தாங்கிய கும்பல் ஒன்று, இந்த சிறைச்சாலையை உடைத்து அங்குள்ள கைதிகளை மீட்க முயற்சித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 21 கைதிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு சுமார் 60,000 மக்கள் பல்வேறு காரணங்களால் கொல்லப்படுகின்றனர். இங்குள்ள சிறைச்சாலைகள் பலவும் அதிக கைதிகளால் நிரம்பி உள்ளது. 368,000 பேர் மட்டுமே சிறை வைக்க போதுமான சிறைச்சாலையில் 726,712 கைதிகளை அடைத்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு நடந்த சிறை தகர்க்கும் முயற்சியில் காவலர்கள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட சுமார் 56 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் பொலிசாரால் சுமார் 4,224 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டை விடவும் சுமார் 26 விழுக்காடு அதிகம் என கூறப்படுகிறது.