ஜனாதிபதி – பிரதமர் தீவிர மந்திராலோசனை!!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று முன்தினம் இரவு நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பகரமாக தெரியவருகிறது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறு நடந்து கொள்வது, மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது தனக்கு ஆதரவு வழங்கவேண்டுமென பிரதமர் ஜனாதிபதியிடம் கோரியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் நீண்டநேரம் இடம்பெற்ற இந்தக்கலந்துரையாடலின்போது எதுவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தனது கட்சிசார்பான விடயங்களை இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான இந்த சந்திப்பு தொடர்பில் நேற்று நடைபெற்ற இரண்டு செய்தியாளர் மாநாடுகளில் பிரஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் நேற்று முன்தினம் இரவு சந்திக்கவில்லை என தெரிவித்தனர்.
இதேபோன்று நேற்றைய தினம் சிறிகொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் நேற்று முன்தினம் சந்தித்தாகவும் அதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமரைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறெனினும் ஜனாதிபதியும் பிரதமரும் நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதேவேளை ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடுகள் வலுவடைந்துகொண்டே செல்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்த பொருளதார மறுசீரமைப்பு குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்ததுடன் பிரதமரின் கீழ் இருந்த மத்திய வங்கியையும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவந்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. ஆனால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதாக ஐக்கியதேசியக்கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.