ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோல்வியடைவது நிச்சயம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், அவரினால் வெற்றிபெற முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தாலும், சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை அவர் இழந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
கொழும்பு வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாங்கள் யாரையும் முடிவு செய்யவில்லை. பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாராக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுபவராக அவர் இருக்கவேண்டும்.
சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதைப்போன்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே எமக்கு தேவைப்படுகிறார். அவரை தெரிவுசெய்யவே நாங்கள் இப்போது முயற்சிசெய்கிறோம். தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி மைத்திரியை அடுத்து வேட்பாளராக நிறுத்துவது சாத்தியமற்றதாகவே உள்ளது. கூட்டு எதிரணியும் நாங்களும் இணைந்தே இந்த முடிவு எடுக்கவேண்டும்.
அவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்தால் ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் பொதுவாக தற்போது பெரும்பான்மை மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர். எனது கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கலாம். அதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதை பேசியே தீர்மானிக்கவேண்டும்.
பசில் ராஜபக்சவின் பெயரும் வேட்பாளராக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சிலரின் பெயர்களும் உள்ளன. ஆனால் இங்கு மூன்று விடயங்களை பார்க்கவேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறக்கூடியவராக ஜனாதிபதி வேட்பாளர் இருக்கவேண்டும். தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரும்புகின்றனர். சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பு அவருக்கு இருக்கின்றது. இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் தோல்வியடைவார்” என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.