News

தமிழரசுக் கட்சி நிராகரித்தாலும் தேர்தலில் குதிப்பேன்

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னை மீண்டும் தமிழரசுக் கட்சி நிறுத்தாவிட்டாலும், மக்களின் நன்மை கருதி கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கான காலம் கனிந்துள்ளதா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி என்ற அடிப்படையில் முக்கியமான கேள்விகளுக்கு வடமாகாண முதலமைச்சர் பதில் வழங்கி வருகிறார். இதில் தமிழரசுக் கட்சியின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.

“பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடிவரும்” எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், வடகிழக்கு தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற அடிப்படை கொள்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகியிருப்பதால் அவ்வாறானதொரு அரசியல் கூட்டணி இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

“இந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்?” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார்” எனவும் வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது.

நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன். அரசியலுக்கு வருவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால், இறை செயலால் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் மேலோங்கும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்யவிடவில்லை. அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன்.

ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைக்கின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை என்றும் வடமாகாண முதலமைச்சர் தனது பதிலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top