தமிழர்களின் எண்ணிக்கை குறைகிறது: இலங்கைக்கு மீண்டும் அழைக்கும் முதல்வர் விக்னேஷ்வரன் .

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வடக்கு மாகாணம் முதல்வர் நீதிபதி விக்னேஷ்வரன் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நூல் வெளியீட்டு விழா, தயாரிப்புகள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழர்களுக்கான இடங்களை சிங்கள மக்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பதை விட, அரசு தான் அதை ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு பதிலாக மாற்று இடங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய போதும், இதுவரை வழங்கப்படவில்லை.
லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வந்த நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவிலும் ஒரு லட்சம் தமிழர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மாகாணத்திற்கு திரும்பி வர வேண்டும், ஏனெனில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு துறைகளில் சிங்களர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.