தலைமையில் மாற்றமில்லை; ஏனைய பதவிகளை முன்மொழிய குழு

இரகசிய வாக்கெடுப்பில் 12 பேர் கொண்ட குழு தெரிவு
கட்சியின் தலைமையை மாற்றுவதில்லை என, இன்று (07) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அதற்கமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என, செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவின் பெரும்பாலானோர் இன்று (07) முற்பகல் 11.00 மணி முதல் இரவு வரை அலறி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
ஐ.தே.க செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் கயந்த கருணதிலக்க, ஐ.தே.க.வின் ஏனைய பதவிகள் தொடர்பிலான விதந்துரைகளை முன்வைக்க 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட குறித்த குழுவில், சஜித் பிரேமதாஸ, ருவன் விஜேவர்தன, மங்கள சமரவீர், ஹரீன் பெனாண்டோ, அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, நவீன் திஸாநாயக்க, ஜே.சி. அளவத்துவள, நலீன் பண்டார, அஜித் பீ பெரேரா, எரான் விக்ரமரத்ன, ரவி கருணாநாயக்க எம்.பி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.