News

தீர்வுக்காக எதையுமே செய்வதற்கு நாம் தயார்! – சம்பந்தன் அறிவிப்பு

”நியாயமான தீர்வொன்றை எட்டுவதற்காக எதையுமே செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. எம்மிடையே காணப்படும் பிளவுகளைக் கைவிட்டு அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரண்டு தீர்வை அடைவதற்குப் பயணிப்போம். இதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கும் நாம் பின்னிற்கமாட்டோம்.”

– இவ்வாறு கொழும்பில் வைத்து அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

“இ ப்போ து ஏ ற் ப ட் டு ள் ள சாதகமான சூழலைச் சரியாகப் பயன்படுத்தி, பக்குவமாகச் செயற்பட்டு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வைப் பெற முயற்சிப்போம்” என்றும் அவர் கூறினார்.

இந்தியப் பத்திரிகையாளர்தி.இராமகிருஷ்ணன் எழுதிய, ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று மாலை கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாம் இப்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறோம். எமது மக்களின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட அரசொன்று இப்போது பதவியில் இருக்கின்றது. இது எமக்கு ஒரு சரியான சந்தர்ப்பம் பொன்னான வாய்ப்பு. இதனை நாங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்தி எங்களுக்குத் தேவையானவற்றைப் பெறவேண்டும். இதற்கு எங்களிட ம் ஒற்றுமை மிக அவசியம். நாங்கள் ஒருமித்து நின்றால் தீர்வை எட்டுவது இலகுவாகிவிடும்.

எமக்கிடையேயான ஒற்றுமை தொடரவேண்டும். ஓரணியில் நின்றுஇந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வுடனான தீர்வொன்றே எமக்கு வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நாம் கைவிடக் கூடாது. இந்த அரசின் ஊடாக எமக்கான தீர்வை அடைவதற்காகச் சகல முயற்சிகளிலும் நாங்கள் ஒற்றுமையுடன் ஈடுபடவேண்டும்.

நாங்கள் ஒற்றுமையாக ஓரணியில் நின்றோம் என்ற செய்தி சர்வதேச சமூகத்துக்கும், இந்த நாட்டின் தலைவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சென்றடையவேண்டும். எங்கள் பிரச்சினை இப்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் பக்குவமாகச் செயற்படவேண்டும். நாட்டை பிளவுபடுத்துவது எமது நோக்கம் அல்ல. ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரங்களுடன் உள்ள சுயநிர்ணய அடிப்படையான தீர்வொன்று எட்டப்படவேண்டும்.

தீர்வுக்காக எதையுமே செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. எங்களிடையேயான பிளவுகளை விட்டுவிட்டு நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவதே இன்றைய தேவையாக உள்ளது.

அதற்காகப் பல்வேறு விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த அரசுடன் முரண்பட்டு நிற்பதை விடுத்து கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பாவித்துஎமது மக்களுக்கு ஒரு நிலையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குச் சகலரும் ஒற்றுமையாக ஓரணியில் நிற்போம்” – என்றார்.

கடந்த காலங்களில் தீர்வு முயற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சுகள், ஒப்பந்தங்கள், இந்திய அரசின் ஒத்துழைப்புகள் குறித்தும் சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top