News

தென்னாப்பிரிக்காவில் பஸ் மீது தாக்குதல் – பிளாட்டினம் சுரங்க தொழிலாளர்கள் பலி

தென்னாப்பிரிக்காவில் பஸ் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் பிளாட்டினம் சுரங்க தொழிலாளர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.

கணிமவளங்கள் நிறைந்த தென்னாப்பிரிக்காவில் ஏராளமான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.

அவ்வகையில், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே மற்றும் மொசம்பிக் நாடுகளுக்கு இடையில் இருக்கும் லிம்போப்போ மாகாணத்துக்குட்பட்ட பர்கர்ஸ்ஃபோர்ட் நகரில் பிளாட்டினம் வெட்டி எடுக்கும் மிகப்பெரிய சுரங்கம் ஒன்றுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் அவுன்ஸ் பிளாட்டினம் கிடைக்கும் இந்த சுரங்கத்தை ஆப்பிரிக்கன் ரெயின்போ மினரல்ஸ் என்னும் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில், இங்கு வேலை செய்யும் சுமார் 50 தொழிலாளர்களை நேற்று இரவுப் பணிக்காக இந்நிறுவனத்தின் பேருந்து ஏற்றிவந்தது. இந்த பேருந்தை வழிமறித்த மர்ம நபர்கள் அதில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கியதுடன் பெட்ரோல் குண்டுகளை வீசி பேருந்தையும் எரித்தனர்.

இந்த தாக்குதலில் 6 பணியாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 44 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணம் யார்? என்பது தெரியாத நிலையில் இதுதொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ராண்டுகள் (சுமார் 42 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) பரிசாக அளிக்கப்படும் என தென்னாப்பிரிக்க போலீசார் அறிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top