நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி பிரதமர் வெற்றி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
பிரேரணைக்கு ஆதரவாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 54 உறுப்பினர்களும், ஆளும் கட்சியில் உள்ள சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் 6 உறுப்பினர்களும் வாக்களித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார். எதிராக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் வாக்களித்தனர்.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, எஸ்.பி.திசாநாயக்க, ஜோன் செனவிரட்ன ஆகியோரும், இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, டிலான் பெரேரா, ரி.பி.ஏக்கநாயக்க, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும் பிரதி அமைச்சர்களான சுமேதா ஜி.ஜயசேன, அநுராத ஜயரட்ன, சுசந்த புஞ்சிநிலமே, லக்ஷ்மன் வசந்த சேனாநாயக்க, தாரக்க பஸ்நாயக்க, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துடன் அதிருப்தியிலிருந்த விஜயதாச ராஜபக்ஷ, பாலித்த ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோரும் பிரதமருக்கு ஆதரவாக, பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.
ஆளும் கட்சியில் உள்ள சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் உட்பட 26 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத சு.க உறுப்பினர்களின் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்ட பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். அது மாத்திரமன்றி சு.கவின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, ஐ.ம.சு.முவின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, மஹிந்த சமரசிங்க, சரத் அனுமுகம உள்ளிட்ட எட்டு அமைச்சர்களும், ஏ.எச்.எம்.பௌசி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஐந்து இராஜாங்க அமைச்சர்களும், முத்துசிவலிங்கம் உட்பட ஏழு பிரதி அமைச்சர்களும் உள்ளடங்கலாக 26 பேர் சபைக்கு வருகை தரவில்லை. இது தவிர இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 51 உறுப்பினர்களும், ஆளும் கட்சியில் உள்ள 4 லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுமாக 54 பேர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏப்ரல் நான்காம் திகதி விவாதத்துக்கு எடுக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கமைய நேற்று முற்பகல் 9.55 மணி முதல் இரவு 9.00 மணிவரை விவாதம் நடத்தப்பட்டு, 9 .30மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சியினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.
நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரம் முடிவடைந்ததும் முற்பகல் 9.55 மணியளவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. பாராளுமன்றம் கூடியது முதல் சபையில் பரப்பரப்புக் காணப்பட்டது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் தினேஷ் குணவர்த்தன பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். இதனை டலஸ் அழகப்பெரும வழிமொழிந்து உரையாற்றினார். இவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே சபையில் ஆங்காங்கே அமைச்சர்கள் கூடிக் கூடி கதைத்துக் கொண்டிருந்தார்கள்.விவாதம் ஆரம்பித்து 5 நிமிடங்களில் சபைக்கு பிரசன்னமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் 5 நிமிடங்கள் வரை சபையில் இருந்த அவர் ஆளும் தரப்பு ஐ.தே.க எம்.பிகளுடன் சிரித்தவாறு உரையாற்றிய பின்னர் சபையில் இருந்து வெ ளியேறினார்.
ஆளும் கட்சி சார்பில் சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல முதலில் உரையாற்றினார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றினர். ஆளும் கட்சி அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த,தயாசிறி ஜெயசேகர மற்றும் ராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கனாயக்க,பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றினார்கள். இதன்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த ஐ.தே.க எம்பிக்கள் இடையூறு விளைவித்ததால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இவர்களின் உரைக்கு ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகள் மேசைமீது தட்டி வரவேற்பு தெரிவித்தார்கள்.
ஐ.தே.க தேசிய பட்டியல் எம்.பி அதுரலியே ரத்ன தேரர் பிரேரணையை எதிர்க்க முடியாது என்று அறிவித்தார். ஐ.தே.க எம்.பிகள் கோசம் எழுப்பி தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரவு 9.30 மணிவரை விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிவுற்றதும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கோரிக்கைவிடுத்தார். இலத்திரனியல் வாக்களிப்பில் காணப்படும் பிரச்சினை காரணமாக ஏற்கனவே பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இரண்டு நிமிடங்கள் கோரம் மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெயர் அழைக்க ஒவ்வொருவராக எழுந்து வாக்களித்தனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த சு.க உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்குகளைப் பதிவுசெய்தபோது எதிரணியில் இருந்தவர்கள் மேசையில் தட்டி தமது ஆரவாத்தைத் தெரிவித்தனர். அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும்போது ஆளும் தரப்பினர் மேசையில் தட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றிபெற்றதையடுத்து ஆளும் தரப்பு எம்.பிகள் மேசை மீது தட்டி கோசமெழுப்பி தமது வரவேற்பை வெளியிட்டார்கள்.அமைச்சர்கள் எம்.பிகள் பலரும் பிரதமருக்கு கைலாகு கொடுத்து தமது வரவேற்பை வெளியிட்டார்கள். பிரேரணைக்கு எதிராக வாக்களித்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆளும் கட்சியைப் பார்த்து கைதட்டியும், கையை உயர்த்திக் காட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு முடிவு சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெ ளிப்படுத்தினர். பலரும் பிரதமருக்கு கைகொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், ஐ.தே.க எம்பிக்கள் தமக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு கைகொடுத்து நன்றியைத் தெரிவித்தவாறு சபையிலிருந்து வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து குழு அறையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்களித்த சகலருக்கும் நன்றியைத் தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிணைமுறி மோசடியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் வழமைக்கு மாறாக இலங்கை மத்திய வங்கியை நிதி அமைச்சிலிருந்து நீக்கியமை
இலங்கை பிரஜை அல்லாத அர்ஜூனா மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைத்தமை
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் மிகத் தெளிவாகவே சம்பந்தப்பட்டிருத்தல்
அரசியல் நண்பர்களைக் கொண்ட பிட்டிப்பன குழுவைநியமித்து மோசடிக்காரர்களை காப்பாற்ற முயற்சித்தமை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் 2015 மார்ச் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட கூற்றை வெளியிட்டு பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமை
பிணைமுறி மோசடியை கோப்குழு விசாரித்துக் கொண்டிருந்தபோது ஐ.தே.கவின் உறுப்பினர்களை மாற்றியமை
கோப் குழுவின் உறுப்பினர்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தமை
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சமரசிறிக்கு நிதி அமைச்சரின் ஆலோசகர் பதவியை வழங்கியமை
அர்ஜூனா மகேந்திரனுக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க ஜனாதிபதி முயற்சித்தபோது மீண்டும் அவரையே நியமிக்க முயற்சித்தமை
அர்ஜூனா மகேந்திரன் ஆளுநர் பதவியை இழந்த பின்னரும் தனது அமைச்சில் ஆலோசகர் பதவியை வழங்கியமை
அர்ஜூனா மகேந்திரன் இலங்கையிலிருந்து வெளியேறும் வரை வெ ளிநாடு செல்வதைத் தடுக்கும் நீதிமன்ற கட்டளையொன்று பெற்றுக் கொடுப்பதைத் தவிர்ப்பதால் அவர் தலைமறைவாயிருக்க வாய்ப்பை ஏற்படுத்தியமை
பொருளாதார மற்றும் நிதிக் கட்டுப்பாடு தொடர்பில் முக்கியத்துவம்வாய்ந்த சட்டங்களை மீறியமை
தேசிய பொருளாதாரத்தை வழிநடத்தியதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தமை
சட்டம் ஒழுங்கும் பற்றிய அமைச்சுப் பதவியை வகித்தநிலையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்றநிலையின்போது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாக்க வழங்க துரித நடவடிக்கை எடுக்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.