Canada

பண்பாட்டுப் பகிர்வு: பூர்வீகக் குடிகளுடனான சந்திப்பு -கனடிய தமிழர் பேரவை

மார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமையன்று, தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும் இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. Tsi Tyonnhet Onkwawena (TTO) மொழி மற்றும் கலாச்சார மையம் (மோஹாக் சமூகம்) மற்றும் தலைமைக்கும் புதுமைக்குமான நடுவம் (CFLI) அமைப்புக்களுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை, இந்த பரிமாற்றத்தை முதன்முதலாக ஏற்பாடு செய்திருந்தது.

ஒன்ராறியோவில் இருந்து 135 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் Belleville நகரில் தங்கியிருந்து இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். முதல் நாளில், டயன்டனாகா மோஹாக் சமூகம் அவர்களின் கலாச்சாரம், கலை, கைவினை, விளையாட்டுகள், மொழி, நடனங்கள் மற்றும் இசை ஆகியவற்றை விளக்கமாக காட்சிப்படுத்தி, அவர்களின் பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய மோஹாக் உணவைப் பரிமாறினார்கள். இந்த நிகழ்வானது பூர்வீகக்குடிகளின் ஒரு மூதாதையரின் ஆசீர்வாதத்துடனும், வரவேற்புரையுடனும் ஆரம்பமாகியது. மோஹாக் சமூகத் தலைவர் டான் மரக்ள் (Chief Don Maracle) வரவேற்புரையுடன் பூர்வீகக்குடிகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கினார். இப்பகுதியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினராகிய மைக் போஸ்ஸியோ (Mike Bossio) வாழ்த்துரையாற்றினார். மோஹாக் சமுதாயத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்த Tsi Tyonnheht Onkwawenna மொழி மற்றும் கலாச்சார மையத்தின் நிறைவேற்று இயக்குநரான கால்லி ஹில் (Callie Hill) தமிழ் கனடியர்களை வரவேற்றார். “மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதி டயன்டனாகா மோஹாக் பிராந்தியத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து நடாத்தப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சியானது தமிழ் சமூகத்திற்கு பூர்வீக குடிகள் பற்றி விளங்கப்படுத்துவதற்கும் தமிழ் சமூகத்தை அறிந்துகொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது. இது மிகவும் அர்த்தமுள்ளதும் முழுநிறைவானதுமான அனுபவம், இந்த நிகழ்வை தொடரும் உறவின் தொடக்கமாக நாம் பார்க்கிறோம்” என்று TTO நிர்வாக இயக்குனர் Callie Hill கூறினார்.

இரண்டாவது நாளில் தமிழ் கனடியர்கள் அவர்களின் கலாச்சாரம், கலை, மொழி, இசை, நடனம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். அன்றைய நாள், பாரம்பரியமான தமிழ் உணவு பரிமாறப்பட்டது. சுமார் 200 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இரண்டாவது நாள் நிகழ்வு விளக்கேற்றும் வைபவத்துடன் ஆரம்பமாகியது, மேலும் சில மோஹாக் தலைவர்களும் கலந்து கொண்டனர். கனடிய தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் வடிவேலு சாந்தகுமார் தனது உரையில், மோஹாக் சமூகத்தின் பாரம்பரிய நிலத்திற்கு எம்மை அழைத்து, இப்பண்பாட்டுப் பகிர்வில் பங்கேற்க ஏற்பளித்ததற்கு டயன்டனாகா மோஹாக் சமுதாயத்திற்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். பூர்வீககுடி சமூகத்திற்கு கனடிய தமிழர் பேரவையால் எழுதப்பட்ட நட்பு செய்தியுடன் ஒரு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஆர். சேரன் தனது உரையில், இரு சமூகங்களுக்கிடையில் சில ஒற்றுமைகள் இருப்பதை ஒப்பிட்டு, அனைத்து பூர்வீக மக்களுடனும் ஒற்றுமையாக இருக்கவேண்டிய தேவையை உணர்த்தினார். நடன ஆசிரியை நிரோதினி பரராஜசிங்கத்தின் மாணவர்களின் சிறப்பு நடனங்களும், மிருதங்க வித்துவான் வாசு ஆசிரியரின் மாணவரால் நடத்தப்பட்ட மிருதங்க கச்சேரியும் மோஹோக் சமூகத்தை மிகவும் மகிழ்வித்தன. தலைமைக்கும் புதுமைக்குமான நடுவத்தின் (CFLI) இளைஞர்கள், தமிழ்க் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம் பூர்வீக குடியினருக்கு விளக்கினார்கள். கோலம், பறை, கும்மி, சிலம்பம், தமிழ் விளையாட்டுகள் மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றிலும் செயல்முறை விளக்கங்கள் இடம்பெற்றன. ஜெசிக்கா யூட் தமிழ் பாடலொன்று பாடினார்.

இந்த பண்பாட்டு நிகழ்வுக்கு ஒன்டாரியோ அரசாங்கம் ஆதரவளித்தது.

வீடியோ : http://toronto.citynews.ca/video/2018/03/29/unique-cultural-exchange/

மேலதிக விவரங்களுக்கு : 416-240-0078 or

[email protected]

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top