பறிபோகின்றது சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழப்பதற்கு நேரிடலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு பதலளித்து பேசிய அவர், “அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்கட்சி வரிசையில் அமருவார்களானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள எதிர்கட்சித் தலைவர் பதவியை இழப்பதற்கு நேரிடலாம்.
சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சியின் திட்டம் இதுவாகவே இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில், மகிந்தவின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.