New Jerseyயிலுள்ள நடன ஸ்டுடியோ ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து உயிர் தப்ப ஜன்னல் வழியாக சிறுமிகள் குதிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Old River சாலையிலுள்ள Edgewater பகுதியில் அமைந்துள்ள நடன ஸ்டுடியோ ஒன்றின் முதல் தளத்தில் திடீரென்று தீப்பற்றியது. பின்னர் தீ இரண்டாவது தளத்திற்கும் மளமளவென பரவியது. உள்ளே சிக்கியிருந்த சிறுமிகள் பயத்தில் அலறினர்.
இதைக் கண்ட Edgewater Police Sgt. James Dalton மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த Tony Nehmi இருவரும் ஏணி ஒன்றில் ஏறி அந்த கட்டிடத்தினுள் சிக்கிக் கொண்டிருந்த சிறுமிகளை மீட்பதற்காக ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். வெளியே வந்த சிறுமிகள் ஜன்னலை ஒட்டியிருந்த திண்டில் தொங்கிக் கொண்டிருப்பதும் அவர்களை கீழே நிற்பவர்கள் குதிக்கச் சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஒரு சிறுமியை ஒருவர் ஏணியில் ஏறி மீட்க முயலும்போது மற்ற சிறுமிகள் கீழே குதித்து விட்டனர். சிறுமிகள் பயத்தில் அலறும் சத்தமும் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் சத்தமும் காண்போரை அதிர்ச்சியடையச் செய்கிறது. கீழே குதித்ததில் சிறுமிகளுக்கு அடி பட்டது என்றாலும் அவர்கள் தீயில் சிக்கியிருந்தால் அவர்களது நிலைமை மோசமாகியிருக்கும்.
கீழே குதித்த சிறுமிகளை உடனடியாக அங்கிருப்பவர்கள் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகின்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிகளுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர்களது நிலைமை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.