பிரதமர் மீது நம்பிக்கை இருக்கின்றது: சரத் பொன்சேகா .

பிரதமர் மீது நம்பிக்கை இருப்பதாகவும் தாம் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச போவதில்லை எனவும் பிரதமருக்கு சேறுபூசும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் எனினும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தலைமை தாங்க அவரால் முடியும் எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற போவதாக கூறும் முன்னாள் ஜனாதிபதி, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை தேடி சென்று பேசுகிறார். எனினும் அவர் தாமதமாகியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நாட்டில் இருந்து தப்பிச் சென்று 15 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். அமெரிக்காவின் குடியுரிமை பெற்றுக்கொள்ளும் போது அமெரிக்க தேசிய கொடிக்கு முன்னால் இருந்தவாறு அமெரிக்காவை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவை பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்த நபர். இவர்கள் அர்ஜூன் மகேந்திரன் பற்றி பேசுகின்றனர். தகுதிகள் இருந்தால், வெளிநாட்டவராக இருந்தாலும் பதவிக்கு நியமிக்க முடியும். இலங்கை மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் மூலம் நாடு இழந்த பணத்தை விட பல மடங்கு பணம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியல் நாட்டுக்கு இல்லாமல் போனது.
நாளை என்னை சிறையில் அடைக்க போகின்றார் மச்சான் என்று மகிந்தானந்த அளுத்கமகே எமது கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
அவருக்கு எதிராக 60 மில்லியன் ரூபா மோசடி தொடர்பான வழக்கு இருக்கின்றது. அவர் குறித்து கவலைப்படுகின்றோம். மகிந்தானந்த எல்லோருடனும் நன்றாக பழகுவார் எனவும் அவர் குறித்து தாம் கவலையடைவதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா தனது உரையில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல், மோசடிகளை பட்டியலிட்டு பல விடயங்களை முன்வைத்திருந்தார்.