பெங்களூர் சிறையில் பரபரப்பு : சசிகலா அறையில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை

பெங்களூரு: பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையில் போலீசார் நள்ளிரவில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரில் பரப்பன அக்ரஹாரம் மத்திய சிறை உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் அடுத்த மாதம் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பயங்கர கைதிகள் மூலம் சதித் திட்டம் தீட்டப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாரம் சிறையில் திடீர் சோதனை நடத்த கர்நாடக குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 200க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலீசார், இணை ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
போலீசார் திடீரென சோதனைக்கு வருவதை பார்த்து, சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்ற குற்றப்பிரிவு போலீசார், கைதிகள் தங்கியுள்ள அறைகளில் தனித்தனியாக சோதனை நடத்தினர். அப்போது, கைதிகளிடம் இருந்த 11 செல்போன்கள், 25 சிம் கார்டுகள், பென் டிரைவ், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலும் போலீசார் சோதனை நடத்தினர். சில மாதங்களுக்கு முன் சசிகலா தங்கியுள்ள அறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதேபோல், சிறை அதிகாரிகள் உதவியுடன் சசிகலா வெளியே ஷாப்பிங் சென்று வருவது போன்ற வீடியோ ஆதாரங்களும் வெளியாகின. இதைதொடர்ந்து சசிகலா அறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், சசிகலாவுக்கு சிறையில் இப்போதும் சில சலுகைகள் செய்து கொடுப்பதாகவும், அனுமதி மறுக்கப்பட்ட சில பொருட்களை சசிகலா உபயோகப்படுத்துவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் இந்த சோதனையை நடத்தி இருக்கலாம் என்று பரப்பன அக்ரஹார சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையால் சிறையில் பரபரப்பு காணப்பட்டது.
‘சசிகலா அறையில் எதுவும் இல்லை’
சிறையில் நடத்திய சோதனை பற்றி இணை ஆணையர் சதீஷ் குமார் அளித்த பேட்டியில், ‘‘தேர்தலை முன்னிட்டு சிறையில் உள்ள ரவுடிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட முயற்சிப்பதாகவும், சிறைக்குள் அதிகளவில் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், சிறைக்கு சென்று சோதனை நடத்தினோம். ரவுடிகள், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் இருக்கும் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சசிகலாவின் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவருடைய அறையில் சந்தேகத்துக்குரிய எந்த பொருளும் இல்லை’’ என்றார்.