போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாது!

போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாது என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு உறுதி வழங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இராணுவ அணி வகுப்புகள் நடத்தப்படாது எனவும், போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாது எனவும் இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிiமைப் பேரவைக்கு உறுதி வழங்கியுள்ளது.
போர் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயர் “நினைவு தினம்” என மாற்றப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியமை குறித்தும் அரசாங்கம் ஜெனீவாவில் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பித்ததன் மூலம் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தடவையாக இலங்கை அரசாங்கம் இவ்வாறான ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இந்த அறிக்கையை அரசாங்கம் வழங்கியுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.