மக்கார்தரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பொது நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன – கனடியத் தமிழர் பேரவை

மக்கார்தரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பொது நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன
புரூஸ் மக்காதரினால் கொலை செய்யப்பட்டவர்களெனக் கருதப்படும் அமரர்களை நினைவு கூரும் அதே வேளை கனடிய தமிழர் பேரவை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களின் குடும்பங்கள் மற்றும் LGBTQ+ சமூகம் ஆகியவர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த மரணங்களினால் தமிழ்க் கனடிய சமூகம் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் மூழ்கியுள்ளது.
புரூஸ் மக்கார்தரினால் கொலை செய்யப்பட்டவர்கள் எனக் கருதப்படும் ஸ்கந்தா நவரத்தினம் மற்றும் கிருஷ்ண குமார் கனகரத்தினம் ஆகிய இருவரும் தம் உயிருக்கு அச்சுறுத்தலாகவிருந்த தாய் நாட்டிலிருந்து பாதுகாப்பினைத் தரவல்லதென்று கருதி கனடாவிற்கு அகதிகளாகக் குடி பெயர்ந்திருந்தார்கள்.
கனகரத்தினம் சிறிலங்காவில் நடைபெறும் வன்முறைகளிருந்து தப்புவதற்காக 491 சக அகதிகளுடன் 2010 ம் ஆண்டு எம்.வி.சன் சீ என்ற கப்பலின் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை வந்தடைந்திருந்தார். அக் கப்பலில் வந்த ஏனையோரைப் போலவே அவரும் போரினால் பலத்த இழப்புக்களைச் சந்தித்திருந்தார். அவரது சகோதரர் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனக்கும் அப்படியானதொரு முடிவே கிட்டும் எனப் பயந்து அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
நவரத்தினம் மற்றும் கனகரத்தினம் ஆகியோரது அடையாளங்கள் அவர்கள் இலகுவாக ஆபத்தினைத் தழுவுவதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாது அவர்களது அகால மரணங்களுக்கும் காரணமாக அமைந்தன எனப் பரவலாகக் கூறப்பட்டது. அவர்களது குடிவரவு அந்தஸ்துடன் குறிப்பாக நவரத்தினம் அவர்களது பாலியல் அடையாளம் ஆகியன இந்த முடிவுகளுக்கு வழிகோலியிருக்கலாம்.
இது விடயத்தில் கனடாவின் பல்நிலை ஸ்தாபனங்களும் சமூக ஆதரவு அமைப்புகளும் இவர்களை உதாசீனப்படுத்திவிட்டன என்பது தெட்டத் தெளிவு. குறிப்பாக, நவரத்தினம் மற்றும் கனகரத்தினம் அவர்களது நிலையற்ற குடிவரவு அந்தஸ்து அவர்களைத் தலைமறைவு வாழ்வுக்குத் தள்ளியிருந்தமையும் அவர்களை இலகு குறிகளாக ஆக்கி விட்டிருந்தன. அத்தோடு, ரொறொண்டோ காவல் துறையினர் உரிய காலத்தில் இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளாதது குறித்தும் நாம் மிகவும் கவலை கொள்கிறோம்.
மத்திய நீதிமன்ற நீதிபதி ஷிரார்ட் எஸ். அஹமட் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது போல, கனடிய குடிவரவு அதிகாரிகளின் கடும் போக்கினால் அகதிகள் எவ்வளவு தூரம் உள அதிர்ச்சிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழும் சுரேஷ் நாகராஜா போன்றவர்களது வழக்கு, அகதிகள் விடயத்தில் கனடா தொடர்ந்தும் ‘இயலாத நியமங்களைக்’ கடைப்பிடிக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
எனவே, அகதிக் கோரிக்கைகளை காலக் கிரமத்துடன் கூடிய முறையான நியமங்களுக்கேற்ப செயலாக்குவதோடு, தேவையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் எனவும் – தவறும் பட்ஷத்தில் இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் நேர்வதைத் தடுக்கவியலாமற் போய்விடும் என்பதை மனதிற் கொண்டு, இது பொருட்டு கனடிய தமிழர் பேரவை குடிவரவு மற்றும் அகதி பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்யும்படி கனடிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தென்னாசிய எயிட்ஸ் தடுப்பு கூட்டணி (ASAAP), அகதிகள் மனித உரிமை அமைப்புடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளது. அது பற்றிய விபரம் பின்வருமாறு:
திகதி : வியாழக் கிழமை, ஏப்ரல் 26, 2018
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : JC’s Banquet Hall
1686 Ellesmere Rd.
Scarborough, ON M1H 2V5