மார்கம் -தோண்கில் தொகுதியின் லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவில் ஈழத் தமிழ் பெண் வனிதா நாதன் போட்டி!

மார்க்கம், ஒன்ராறியோ – யோக் கல்விச்சபையின் துணைத் தலைவரான செல்வி வனிதா நாதன் மார்கம் தோண்கில் தொகுதியின் லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மார்கம் தோண்கில் தொகுதியில் பல காலமாக வாழ்ந்து வருவதாலும் இத்தொகுதி மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாலும் அவர்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் சிக்கல்களை நான் நன்கறிவேன். “எனது அடித்தட்டு மக்களுடனான பட்டறிவை ஒன்ராறியோப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச்சென்று மக்களின் தொடர்ச்சியான மேம்பாடு, குடும்பங்களின் உயர்வுக்கு உதவுதல், நம் குழந்தைகளின் வெற்றி மற்றும் முதியோரைப் பேணல் போன்றவற்றுக்கு உழைப்பேன்” என வனிதா நாதன் தெரிவித்தார். “ஒரு குமுகமாக இதுவரைக் கண்ட வளர்சியைத் தொடந்தும் பேண வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன். எமது குமுகத்திற்குப் பயனளிக்கும் தொடர்சியான உயர்வை நோக்கிய உறுதியான குரலாக நான் இருப்பேன்.”
2010ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கல்விச் சபை உறுப்பினராகத் தெரிவான வனிதா நாதன், குடும்பங்களுக்காகக் குறிப்பாக சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் குடும்பங்களுக்காக ஆர்வத்துடன் குரல்கொடுப்பவர். வனிதா நாதன் மார்கம் நகரில் நீண்டகாலம் வாழ்பவர், குமுக மற்றும் இளையோருக்கான பணியாளர், முதியோருக்கான உதவிப் பணியாளர், பெற்றோர் குழும ஒருங்கிணைப்பாளர், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர் ஆவார். அண்மையில் தான் ஓய்வு பெறுவதை அறிவித்த நீண்ட கால லிபரல் கட்சியின் மாகண சபை உறுப்பினரும் அமைச்சருமான மதிப்புக்குரிய மைக்கல் சான் அவர்களின் இடத்துக்கே வனிதா போட்டியிடுகிறார்.
“பத்தாண்டுகளுக்கும் மேலாக மைக்கல் மிக்ச்சிறந்த குமுக உறுப்பினராகத் திகழ்ந்தார்” என வனிதா குறிப்பிட்டார். அவரது வரலாறானது கனடாவில் புதிதாகக் குடியேறி ஒளிமயமான எதிர்காலத்தைத் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் உருவாக்க எண்ணும் அனைவரோடும் ஒத்துப்போகும். ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தேர்தல் பரப்புரைத் துணைத் தலைவராக மைக்கல் தொடர்ந்து பணியாற்றுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் வேட்பாளராகத் தெரிவாகுமிடத்து அவரது மதியுரைகளிலும் வழிகாட்டலிலும் தங்கியிருப்பேன்.
வனிதா மக்களாற் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்க் கனடியப் பெண்ணாகவும் மார்கம் தோண்கில் தொகுதியின் தற்போதைய கல்விச் சபை உறுப்பினராகவும் விளங்குகிறார். அத்தோடு யுத்-லிங் அமைப்பிலும் யோரக் பிரதேச குடும்ப சேவையிலும் பணியாற்றி வருகிறார்.