மீண்டும் இறுக்கமடையும் கொழும்பு அரசியல்: நாளை மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை .

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக நாளைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்திருந்தனர். இதில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரத்ன, சுமேதா ஜயசேன, டி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இந்த விடயம் தற்போது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்களை உடன் பதவி நீக்க வேண்டும் என நேற்றைய தினம் பிரதமரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, நாளைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்து கொழும்பு அரசியல் மேலும் இறுக்கமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.