News

முல்லைத்தீவை முற்றிலும் விழுங்கப் போகும் மகாவலி! – முதலமைச்சர்

முல்லைத்தீவை மகாவலி அதிகார சபை முற்றிலும் தன்வசம் கொண்டு வந்துவிடும் நிலை ஏற்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். நில சுவீகரிப்பு தொடர்பான விசேட அமர்வு வடக்கு மாகாண சபையில் இன்றுஇடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“மகாவலி அதிகாரசபைச் சட்டம் 1979ஆம் ஆண்டின் 23ஆவது சட்டமாகும். அதன் முக்கிய நோக்கங்கள் உணவு உற்பத்தி, நீர்சக்தி உற்பத்தி, காணியில்லாதவருக்கு காணி வழங்கல் மற்றும் வெள்ளத்தடுப்பு ஆகியனவாகும். 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்த போது, மாகாணங்களுக்கு சில உரித்துக்கள் கொடுக்கப்பட்டன. முக்கியமாக அரச காணிகள் சம்பந்தமாக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாகாண சபைகளையே சாரும் என்று அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் அரசியல் யாப்பின் ஒரு அங்கமே. 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாவலி அதிகார சபைச் சட்டம், எதனையும் கணக்கில் எடுக்காது தான்தோன்றித்தனமாக தனது வேலைகளைச் செய்து கொண்டு போகின்றது. காணிகளைக் கைவசம் வைத்திருப்பது மட்டுமன்றி பயனாளிகளுக்குக் கைமாற்றவும் அது உரித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான குடியேற்றங்களும் காணிக் கைமாற்றங்களும் எந்த அளவுக்கு சட்டப்படி வலிதுடையது என்பது இன்னமும் நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். மகாவலி அதிகார சபைச் சட்டம் 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமையவே செயற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை.

நாயாறு கடல் ஏரிக்குத் தெற்கே 6 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. கொக்குத்தொடுவாய் கிராமமும் அதனுள் அடங்கும். போர் காரணமாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம் பெயர்ந்தார்கள். சுமார் 27 வருட காலமாக பல இடங்களில் அவர்கள் தற்காலிகமாக குடியிருந்து வர வேண்டியிருந்தது. பொதுவாக அவர்கள் விவசாயிகளே. சிலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் பாரம்பரியமாக கடலோரத்தில் வாழ்ந்து வந்திருந்தாலும் அவர்களின் விவசாய நிலங்கள் கொக்கிளாய் கிராமத்துக்கு வடக்கிலும் மேற்கிலும் இருந்தன.

இவை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1950, 1966, 1971 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்த காணிகள். இவர்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இவர்களின் காணிகள் மகாவலி திட்டத்தின் கீழ் மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்துக்குச் சொந்தமான காணிகள் என்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. மக்கள் தமது பாரம்பரிய காணிகளை இழந்தனர். அக்காணிகள் மகாவலிக் காணிகளாக மாறின. 2013ஆம் ஆண்டு இம் மக்கள் தமது காணிகளுக்கு திரும்பிய போது, அவர்களின் விவசாய நிலங்கள் மகாவலி அதிகார சபையால் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

எல்.எல்.ஆர்.சியானது இவர்களின் காணிகள் திரும்ப அவர்களுக்கே கையளிக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்திருந்தும் அவர்களின் காணி அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

கரைத்துறைப்பற்றின் காணிகள் யாவும் மகாவலியால் விழுங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலாறு வெலிஓயா ஆகிவிட்டது. ஒருமித்த எங்களின் நடவடிக்கைகளால்த்தான் ஓரளவுக்கு இதனைத் தடுத்து நிறுத்தலாம். அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது, மகாவலி அதிகார சபைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அவர் அதுபற்றி பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் அது அவ்வளவு சுலபமன்று. புதியதொரு சட்டத்தை மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்ட 13ஆம் திருத்தச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தயாரித்து ஏற்ற பின்னரே மகாவலி அதிகார சபைச் சட்டத்தில் கைவைக்க முடியும். அதற்கிடையில் முல்லைத்தீவை முற்றிலும் தன்வசம் கொண்டு வந்துவிடும் மகாவலி அதிகார சபை. இது தான் யதார்த்தம்” என தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top