News

மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள்! ஏன்? எதனால்?

இலங்கை அரசு தமிழ் மக்களை வகைதிகையற்ற ரீதியில் இனப்படுகொலை செய்தது. போர்க்குற்ற மீறல் என்றும் மனித உரிமை மீறல் என்றும் உலகம் அழைத்தாலும் உண்மையில் நடந்தது ஓர் இனப்படுகொலை என்பதை உலகின் மனசாட்சி அறியும். ஈழ இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது? எப்படி எல்லாம் மக்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதும் ஈழ மக்களின் உரிமைக்காக போராடிய போராளிகளை எப்படி எல்லாம் சிங்கள அரசு அழித்தது என்பதும் இந்த உலகிற்கே தெரிந்ததே. ஆனால் ஈழம் இன்றும் மற்றொரு இன அழிப்புக்கு முகம் கொடுக்கிறது. சத்தமின்றி எந்த சலனமும் இன்றி மெல்ல மெல்ல விடுதலைப் புலிப் போராளிகள் அழிக்கப்படுவதே அந்த இனப்படுகொலை.

அண்மையில் இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம் ஈழத்தை மீண்டும் உலுக்கியிருக்கிறது. ஒரு சாதாரண காய்ச்சல் வந்த நிலையில் அவர் மரணமடைந்து போனார். நாட்டுக்காக போராடிய அவர் இரு கைகளையும் இரு கால்களையும் இழந்தபோதும் எந்தவிதமான தொற்று நோய்களோ, தொற்றா நோய்களோ அற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். காரணம் அறியப்படாத எண்ணற்ற மரணங்களில் இதுவும் ஒன்றாய் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு மரணம் நடந்தால் அதுபற்றி விசாரணை செய்யப்படும். திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை இலங்கை அரசாங்கம் பிரதேசத்திற்கு பிரதேசம் பணியமர்த்தியுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நோய்கள் காரணமாகவும் மர்மமாகவும் முன்னாள் போராளிகள் இறக்கின்றனர். இந்தக் கூட்டு மரணங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை. எல்லாமே சாதாரண மரணங்கள்தான் என கடந்து செல்லும் அரச இயந்திரத்தை விடுவோம். நாம் என்ன செய்கிறோம்? இந்த மரணங்கள் எல்லாவற்றையும் வெறும் மரணங்களாய் கடந்து செல்ல நிர்ப்பந்திப்பது எவ்வளவு குரூரமானது.

ஈழத்தில் போர் முடிக்கப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட போராளிகள் இரண்டு, மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். தடுப்பு முகாம் என்பது புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மாபெரும் வதை முகாம் என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அங்கிருந்து வெளிவந்த பின்னர் சில போராளிகள் பல்வேறு நோய்களில் இறந்த சம்பவங்கள் ஈழத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு நல்லிணக்கப் பொறி முறைக்கான செயலணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது.

இலங்கை அரசு சர்வதேச அமுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் அதனைக் குறைக்கும் முகமாக இந்த செயலணி, வடகிழக்கு ஈழ மக்களிடையே அமர்வுகளை நடத்தி நல்லிணக்கத்திற்கான ஆலோசனைகளைக் கோருவதாக கூறியது. இந்த நிலையில் குறித்த செயலணியின் கருத்தறியும் அமர்வில் ஒரு முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய சாட்சியமே இலங்கை அரசை மற்றுமொரு இன அழிப்புக் குற்றத்தில் தள்ளியது.

தமக்கு தடுப்பில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் அவை தமது உடல் வலுவை பாதிக்கும் விஷ ஊசிகளாக இருக்கலாம் என்று தாம் அஞ்சுவதாகவும் அதன் பின்னர் உடலில் மாற்றங்களை உணர்ந்ததாகவும் அந்த முன்னாள் போராளி குறிப்பிட்டார்.

அப்போராளியின் சாட்சியம்.

குரோசிமா – நாகசாகி வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூட கண்டிப்பாக இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குதான். எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டிட்டன்…….நான் அம்பு வில்லு தாறன் உன்னைப் பாதுகாக்க…….என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும். சரணடையப் போறவங்களைச் சுடுவது நியாயமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள். நான் ஒரு முன்னைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயன உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களுக்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தனையோ கிலோமீட்டர் ஓடுற எனக்கு இப்போ ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைக்கின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விளங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளுக்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்பத் துளிர்க்காது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி 2013இல் விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் புற்று நோயில் இறந்தார். அவரது மரணம் இடம்பெற்ற நாட்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மற்றுமொரு முன்னாள் போராளி திடீரென மயக்கமுற்ற நிலையில் இறந்தார். அத்துடன் அதற்கு முன்னரும் பின்னரும் சில முன்னாள் போராளிகள் மரணமடைந்தமையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

தமிழினி அவர்களின் மரணம் இடம்பெற்றுச் சில நாட்களில் கிளிநொச்சியில் கெளசி என்ற முன்னாள் போராளி புற்றுநோயில் இறந்தார். இவ்வாறு முன்னாள் போராளிகள் புற்றுநோயினாலும் வேறு பல மரணங்களாலும் இறந்த செய்திகள் ஏனைய முன்னாள் போராளிகளின் மத்தியிலும் ஈழ மக்களிடத்திலும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தின.

தமிழினி விடுதலைப் புலிகளின் காலத்தில் ஓய்வற்றுப் பணியாற்றியமையால்தான் புற்றுநோய் வந்து இறந்தார் என்று அவரது கணவர் வாதிட்டதுடன் இவ்வாறான சந்தேகங்கள் அரசியல் பிழைப்புக்கானவை என்று கூறியிருந்தார். ஈழ மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகளின் தொடர் மரணங்கள் மக்களை சந்தேகத்திற்குள்ளாக்குவது இயல்பானது. அதனை மருத்துவ ரீதியாக நிரூபிப்பது மருத்துவத்துறை சார்ந்தவர்களின் வேலை. இந்த நிலையில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் டிகுணதாசன் என்ற முன்னாள் போராளியும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவரது நோய் குறித்தும் மர்மம் காணப்பட்டதாக அவரது நண்பர்கள் கூறினார்கள்.

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஆசீர்வாதம் ஸ்ரிபன்(வயது 36), சாவடைந்தார். புளியங்குளம் சந்தியில் பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது திடீரென மயக்கமடைந்து கீழே விழ அவர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இனியன் என்ற முன்னாள் போராளி(02-01-2017) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 34 வயதான ரிசிகரன் என்ற இயற்பெயரை உடைய இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை. கடன் பிரச்சினையால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என இவரது மனைவி. வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி இராசதுரை திக்சன்(வயது 26) (20-16-1211) சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோட்டப் பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளி வவுனியா மாமடு சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்ற அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக சாவடைந்தார். இறுதி யுத்தத்தினால் விழுப்புண் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி செல்வம் என்றழைக்கப்படும் மயிலன் மோகன் 10-12-2015 அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறுதி யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு விழிப்புண் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவடைந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதி படையணியின் முன்னாள் போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின் துணைவி சந்தியா எனப்படும் முன்னாள் போராளியே தாய்லாந்தில் அக்டோபர் முதல் வாரம் 2017ல் சாவடைந்தார். இவர் விடுதலைப் புலிகளின் மாலதி படையணியில் இணைந்து தாயக விடுதலைக்காகப் போரடியவர். சிறந்த படைப்பாளியாகவும் விளங்கியவர்.

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி இராசரத்தினம் ஸ்ரீபவன்(வயது 40) ஜூலை 31 2017 அன்று உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி உயிரிழந்துள்ளார். இறக்கும் முன்னர் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமை கண்டறியப்பட்டது.

பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி அமலதாஸ்(வயது46) நவம்பர் 3, 2016 அன்று திடீரென மரணித்துள்ளார். உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்குச் சென்றவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். இவர் மயக்கத்துடன்தான் இருக்கின்றார் என நினைத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே மரணமடைந்தமை தெரியவந்தது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட இவரது மரணம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இவரது மனைவி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சாரதி முன்னாள் போராளி ராகுலன் என்றழைக்கப்படும் சசிகுமார் ஜீலை 15, 2016 திடீர் மரணம் அடைந்தார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டம் புலத்தினைச் சேர்ந்த மொராவகன்புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி பேரின்பராசா தனபாலசிங்கம்(40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஓகஸ்ட் 2, 2016 அன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். விபத்தினால் பாதிக்கப்பட்ட இவருக்கு தலையில் விறைப்புத்தன்மை காணப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து விடுதலைக்காகப் போராடி கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வின் பின் தனபாலசிங்கம் விடுதலையானார்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் அவர்களின் சகோதரர் முன்னாள் போராளி புலிமறவன். கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மற்றொரு போராளி. ஒரு ஆசிரியராக இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர் இலங்கை அரசின் புனர்வாழ்வு வதைமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியராக கடமை ஆற்றியுள்ளார்

இவரது அண்ணன் புலித்தேவன் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றபோது சிங்கள இன அழிப்பு படைகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவர் சரணடைந்து வதைமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு இன்றைய களத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

தமிழினிக்கு விடுதலைப் புலிகள் காலத்திலேயே புற்றுநோய் இருந்தது என்று மற்றுமொருவர் நல்லிணக்க பொறிமுறை செயலணியின் முன்னர் புதுப்புரளியைக் கிளப்பினார். புனர்வாழ்வின் பின்னரே புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில் இதுகுறித்து பொய்யுரைத்ததும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வதைமுகாம் என்பது புறவயமாகவே வாதைகளுக்கான நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. அத்துடன் அங்குள்ள நடைமுறைகள் யாவும் வாதையுடன் தொடர்புடையது. வதைமுகாங்களில் இருந்த காலத்தில் அதனை விட்டு எப்போது வெளியேறுவோம் என்ற அழுத்தத்தில் வாழ்ந்ததாக முன்னாள் போராளிகள் குறிப்பிடுகிறார்கள்.

போராளிகளின் சமூக இனப் பற்றை அழிக்கும் உளவியல் போர் ஒன்றே புனர்வாழ்வு என்ற தடுப்பு வதை முகாமின் நோக்கமாகும். அத்துடன் வதைமுகாமின் அறிவிப்பு, முள்வேலி, படைகளின் அணுகுமுறை, வழங்கப்படும் உணவு, தங்கியிருந்த அறைகள், பிரிக்கப்பட்ட முறைகள் எனப் பலவும் நூதனமாக அக வாதைகள் சார்ந்தது என்பதை வெற்றிச் செல்வி தன்னுடைய ஆறிப்போன காயங்களின் வலி(பம்பைமடு வதை முகாம் தொடர்பான பதிவு) புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

திருகோணமலையில் சிங்கள அரசின் பாரிய இன அழிப்பு வதைமுகாங்கள் இருந்த விவகாரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல முன்னாள் போராளிகளும் ஈழ மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுள்ளார்கள்.

புனர்வாழ்வில் இருந்தபோது தமக்கு புரயிலர் கோழிகளே அதிகமும் பெரும்பாலான நாட்கள் தமக்கு வழங்கப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சொன்னார். தடுப்பில் இருந்தபோது வழங்கப்பட்ட அப்பிள், ஒரேஞ்சுப் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று வெளியில் இருந்த சில மருத்துவர்கள் கூறியதாக இன்னுமொரு முன்னாள் போராளி சொல்லியிருந்தார். ஆனால் தடுப்பில் இருந்த நிலையில் இருந்த விரக்தி, அழுத்தம் காரணமாக இதைக் குறித்தெல்லாம் யோசிக்கும் நிலையில் தாம் இருக்கவில்லை என்று முன்னாள் போரளிகள் குறிப்பிடுகிறார்கள்.

இறுதிப் போரின் பின்னா், வதை முகாம்களிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலரும் பல உடல் நோய்களுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சு முன்னாள்போராளிகள் மருத்துவ ஆய்வுக்கு பெயா்களை பதிவு செய்யுமாறு கோரியது. பல முன்னாள் போராளிகள் தமது உடலை ஆய்வு செய்ய பெயா்களை பதிவு செய்துள்ளனர். மனம் தளராமல் அனைத்து முன்னாள்போராளிகளும் இந்த ஆய்வுக்கு முன்வரவேண்டும் என்றும் வடக்கு சுகாதார அமைச்சு கூறியது. அத்துடன் உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களும் மருத்துவம் பெற்றவர்களின் விபரங்களையும் வடக்கு அரசு திரட்டியது. எனினும் கரிசனை பூர்வமாக வடக்கு மாகாண அரசு இதில் ஈடுபடவில்லை இன்னமும் போராளிகளின் மரணங்கள் நீடிப்பதற்கான காரணத்தைக் கண்டறியவில்லை.

சாதாரணமாகவே முன்னாள் போராளிகள் தம்மை அழித்துக்கொள்ளும் ஒரு சூழலுக்குள்தான் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தோல்விகள், நீதியற்ற நடவடிக்கைள், சமூக நெருக்கடிகள் என்பன அவர்களை பெரும் அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன. பெருமளவான முன்னாள் போராளிகளின் தற்கொலை மரணங்கள் இதன் பாற்பட்டே நிகழ்ந்துள்ளன. இதற்கான பொறுப்பை வெறுமனே சிங்கள அரசிடம் மாத்திரம் தள்ளிவிட முடியாது. முன்னாள் போராளிகளுக்கு அவர்களின் கல்வி அறிவுக்கு ஏற்ப அரச தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் முனைந்திருக்க வேண்டும்.

வேலையின்மை, இராணுவ நெருக்கடி, உடல் நோய்கள் என மன அழுத்தங்களின் மத்தியில் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் எதனையும் அறியாமல், உணராமல் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும்அவர்கள் குடும்பங்களையும் விஷ ஊசி குறித்த செய்திகள் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன. வவுனியாவில் நடந்த சிறிலங்கா அரசின் கருத்தமர்வில் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளிக்கையில் இந்தச் செய்தி தம்மை மீன்டும் பெரும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தியிருப்பதாக கூறினார்.

தானும் உடல் ரீதியாக மாற்றங்களை உணர்வதாகவும் ஆனால் இந்தச் செய்திகளால் மேலும் பாதிக்கப்பட்டு தமது வாழ்வும் குடும்பமும் இன்னும் பாதிக்கலாம் என்றும் இருக்கும்வரை எதையும் அறியாமல் இருப்போம் என்றும் அவர் கூறினார். மதுப்பழக்கம், புகைத்தல் பழக்கம் இல்லாத முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு புற்றுநோய் ஏற்பட முடியும் என்று இலங்கை பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.

இதுவரையில் 107 போராளிகள் இறந்துள்ளதாகவும் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் இது தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் மருத்துவப் பரிசோதனை இடம்பெறவேண்டும் என்றும் அவர் இலங்கைப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

விஷ ஊசி போட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.

முன்னாள் போராளுகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதியை கோருவேன் என்று அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் ஆய்வுகள், பரிசோதனைகள் எதுவும் இடம்பெறாமலே இராணுவ ரீதியான நம்பிக்கை மற்றும் பெளத்த மத ரீதியான நம்பிக்கையின்பால் பேசுவதாக தோரணை செய்துகொண்டு மறுப்பு வெளியிட்டது.

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றவேன்டிய தேவை இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. தமது புனர்வாழ்வு நடவடிக்கையை சர்வதேசம் வந்து பார்வையிட்டதாகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கூறினார். இலங்கை அரசு தான் இழைத்த குற்றங்களை எப்போது ஒப்புக்கொண்டது?

முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரச படைகள் இழைத்த இனப்படுகொலைக் குற்றங்களை – சாட்சியங்களை – ஆதாரங்களை பார்த்தவர்களுக்கு சிறிலங்கா அரசு பூச்சுற்ற முடியாது. சிங்கள அரசு எதனையும் செய்யும். தமிழ் இனத்தையும் ஈழப் போராளிகளையும் அழிக்க சிங்கள அரசு எதனையும் செய்யும் என்பதே கடந்த கால வரலாறு.

இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் மறுக்கிறது. நிராகரிக்கிறது என்றும் இலங்கையானது பெளத்தத்தை பிரதானமாகவும் ஏனைய மதங்களை முக்கியமானதாகவும் மதிக்கின்ற பின்பற்றுகின்ற ஒரு நாடு என்றும் எமது இராணுவம் ஒரு மிருகத்திற்குக்கூட விஷத்தைக் கொடுத்ததில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறினார். இவ்வாறு இவர் கூறினாலும் ஈழ இறுதிப்போரில் கொத்துக் குண்டுகளை போர் தவிர்ப்பு வலையங்கள்மீது சிங்களை இராணுவம் வீசியதையும் நஞ்சுக் குண்டுகள் அடித்து மக்களையும் போராளிகளையும் பரிதாபமாக இனப்படுகொலை செய்ததையும் உலகமே அறியும்.

புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியும். இதன் அண்மைய உதாரணம் அலெக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ ரஸ்யா உளவுத்துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புற்றுநோயினால் இவர் 2006ம் ஆண்டு பிரித்தானியாவில் இறந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

ரஸ்யாவின் புலனாய்வுத்துறையில் அதிகாரியாக ரஸ்யாவின் அரச தலைவர் விளாமிடிமிர் பூட்டினுடன் பணியாற்றிய அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ அங்கிருந்து தப்பிச்சென்று பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து பிரித்தானியாவின் உளவுத்துறையினருக்கு தகவல்களை வழங்கும் நபராக மாறியதால் அவரை புற்றுநோய்க்கு உள்ளாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகின்றது.

போரில் ஈழத் தமிழர்களை பல்வேறு வழிமுறைகளில் இலங்கை அரசு கொன்றது. உணவைத் தடுத்து, மருந்துகளை தடைசெய்து, போர் தவிர்ப்பு வலையங்கள்மீது அனல் தாக்குதல்களை நடத்தி, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் கொன்று வீசப்பட்டனர், வெள்லைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி தரையில் இருத்தி பின் பக்கமாக சுட்டுக்கொன்றதும் பெண்போராளிகளை நிர்வாணமாக்கி தரையில் இருத்தி பின்பக்கமாக சுட்டுக்கொன்றதும் பெண்போராளிகளை பாலியல் கொடுமை புரிந்து கொன்றதும் நடைபெற்றது.

போரின் பின்னர் வடகிழக்கில் திட்டமிட்டு இனவிருத்தியைத் தடுக்க கருத்தடைகள் இடம்பெற்றமையும் அம்பலமானவை.

இலங்கை அரசு ஈழத் தமிழ் இனத்தை அழிக்க எதை வேன்டுமானாலும் செய்யும் என்பதையே கடந்தகால வரலாறு உணர்த்துகிறது. நடந்து முடிந்த இனப்படுகொலை குறித்து மாத்திரமின்றி தற்போது மர்மமாக தொடரும் முன்னாள் போராளிகள் குறித்தும் நீதியான சர்வதேச விசாரணை ஒன்றே அவசியமானது. வரலாறு முழுவதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறிவதும் அவர்களின் நிலம் இன்ன பிற உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான காரணங்களுக்கு மாத்திரமின்றி இனப்படுகொலைப் போரின் பாதிப்பால் தொடரும் இன அழிப்பு மரணங்களைக் குறித்தும் உண்மையை கண்டறிதலுக்காக சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தும் தமிழரின் போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்படவேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top