News

மைத்திரிக்கு இன்று பலப்பரீட்சை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு 7 மணிக்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது எனவும், இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு சு.கவின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

தேசிய அரசில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதால் இன்றைய சந்திப்பானது அனைத்து வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையால் மைத்திரி பக்கமுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இருவேறு அணிகளாக பிரிந்துள்ளனர்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் கூட்டரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன், அரசில் தாம் வகித்த பதவிகளையும் துறந்துள்ளனர். வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்த உறுப்பினர்கள் 2020 வரை கூட்டாட்சி தொடரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இறுதியாக கடந்த 9ஆம் திகதியே நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சு.கவின் இரு அணியினரும் அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தனர்.

பிரதமரை எதிர்த்த சு.க. உறுப்பினர்கள் 16 பேரிடமிருந்தும் அமைச்சு, இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகளைப் பறிக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த முடிவெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு, ஜனாதிபதியின் லண்டன் விஜயம் ஆகியவற்றால் சு.கவின் மத்தியகுழு அதன் பிறகு கூடவில்லை. இருந்தும் சு.கவின் இரு அணிகளும் தலைவர் நாட்டில் இல்லாத வேளையில் தனித்தனியே சந்திப்புகளை நடத்தின.

இதன்படி பிரதமரை எதிர்த்த 16 பேரும் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில்கூடி அரசிலிருந்து வெளியேறும் முடிவை உறுதிப்படுத்தினர். இந்த முடிவை லண்டன் சென்றிருந்த ஜனாதிபதியிடம் அறிவிப்பதற்காக டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று லண்டனுக்குச் சென்றது. தான் நாடு திரும்பியதும் மத்திய செயற்குழுவை கூட்டி இதுபற்றி ஆராய்வோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் தேசிய அரசு தொடர்பில் ஆராய்வதற்காக சரத் அமுனுகம தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்றையும் ஜனாதிபதி அமைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்களையும் பதவியிலிருந்து தூக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சு.கவின் மத்திய குழு கூடுகின்றது.

இதன்போது கூட்டரசிலிருந்து சு.க. வெளியேறவேண்டும் என்ற யோசனை 16 பேரின் சார்பில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் கோரப்படவுள்ளது.

அத்துடன், இப்பிரேரணையைத் தோற்கடிக்கும் முயற்சியில் மற்றைய குழு இறங்கவுள்ளது. இதனால், மத்திய குழுக் கூட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், சரத் அமுனுகம தலைமையிலான குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சு.க. கூட்டரசிலிருந்து வெளியேறாவிட்டாலும், பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 பேரும் எதிரணியில் அமரும் முடிவை எடுத்துவிடுவர். இதனால் மஹிந்த அணியின் கை ஓங்கக்கூடும். அரசில் அங்கம் வகிக்கும் தரப்பை ஆதரித்தாலும் மைத்திரி, ஐ.தே.கவை பாதுகாக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.

எனவே, இன்றைய தினம் கட்சித் தலைவர், நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் மைத்திரிக்குப் பலப்பரீட்சை நாளாகவே அமையப்போகின்றது. பெரும்பாலும் வாக்கெடுப்பு மூலம் சு.கவின் மத்திய குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு அவர் பச்சைக்கொடி காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது – என்றுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top