News

யாழில் இராணுவத்தினரால் மறைக்கப்பட்ட ரகசியங்கள்! அவர்களாலேயே அம்பலமான உண்மைகள் .

30 வருடங்களாக ஈழத்தில் இடம்பெற்ற கோர யுத்தத்தில் தமிழர்கள் இழந்தவை ஏராளம். இலட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக இலங்கை இராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டது மாத்திரமல்லாது, திட்டமிட்ட முறையில், தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர், தமிழர்களின் காணிகளும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் தமீழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கோர யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், அநாதரவான நிலை ஒன்றுக்கு தமிழர் தரப்பு தள்ளப்பட்டது. தான் தனித்துவமாய் வாழ்வதற்கு கேட்ட தனி அரசையும் கொடாமல், தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த பூர்வீக காணிகளையும் கையகப்படுத்தி இலங்கை இராணுவத்தினர் மீளா துயரினை தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும், நாங்கள் மாண்ட பரம்பரை அல்ல ஆண்ட பரம்பரை என்ற அதே துணுக்குடன், 30 வருட காலமாய் ஆயுதம் ஏந்தி போராடிய எம் உறவுகள் 2009இற்குப் பின்னர் அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி என்பது சிறுபான்மையினர் படைத்த ஒரு புரட்சியின் நாளாகும், அதாவது நல்லாட்சி மலர்வதற்கு முன்னர் நிலவிய கொடுங்கோள் ஆட்சி சிறுபான்மை இனத்தவரால் அன்றைய தினத்திலேயே முடிவுகட்டப்பட்டது.

மலர்ந்த இந்த நல்லாட்சியின் மூலமாவது தாம் இழந்ததை மீட்டெடுக்க முடியும் என்ற நப்பாசை வடக்கு கிழக்கு வாழ் அனைத்து மக்களுக்கும் இருந்தது. தமது நிலத்திற்காக, தமது உறவுகளுக்காக என தமது அகிம்சை வழி போராட்டத்தை சளைக்காது தொடர்ந்தும் மேற்கொண்டார்கள். இதன் விளைவாகவும், தமிழ் மக்கள் கொடுத்த அழுத்தங்களின் காரணமாகவும் படிப்படியாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன, எனினும் அள்ளிக்கொடுத்து வாழ்ந்த மண்ணில் தமிழர்களுக்கு அவர்களின் காணிகள் தற்போது இராணுவத்தினரால் கிள்ளிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அண்மையில், 28 வருடங்களாக இராணுவத்தின் பிடியிலிருந்த யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன. தமிழ், சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி.வடக்கில் காணி விடுவிக்கப்படும் என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க, நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

எனினும் விடுவிக்கப்பட்டிருந்த காணிகள் தொடர்பில் தற்போது மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். மேற்படி பகுதியில் 3 படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பூரணமாக மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், 2 வீதிகளை பூரணமாக பயன்படுத்த அனுமதிக்காமல் இராணுவம் தடை செய்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தபோதும் அங்கு மக்கள் உடன் சென்று குடியேற முடியாத அளவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் ஆங்காங்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஜே.240, ஜே.246, ஜே.2 47 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவே 683 ஏக்கர் நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி கிராமசேவகர் பிரிவுகள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே.

இதற்குள் படையினரின் 3 பாரிய முகாம்கள் காணப்படுகின்றதோடு, படையினரின் முகாம்கள் அமைந்துள்ள நிலங்களுக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேற முடியாத பரிதாப நிலையிலும் உள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்தும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். எனவே மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள ஜே.240, ஜே.246, ஜே.247 கிராமசேவகர் பிரிவுகளில் பூரணமாக மக்களை மீள்குடியேற்ற இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தற்போது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள கட்டுவன் – மயிலிட்டி வீதியில் ஒரு பகுதி மற்றும் மாவிட்டபுரம் – வயாவிளான் வீதியில் ஒரு பகுதி ஆகியவற்றை இராணுவம் தொடர்ந்தும் தமது பயன்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் தடை விதித்திருக்கின்றனர். இதனால் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை ஊடறுத்தே மாற்று பாதையை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், மாற்று பாதையாக பயன்படுத்தப்படும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனை மீறி அந்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேறினால் மாற்று பாதை இல்லாத நிலையில் மேற்படி வீதிகளையும் பயன்படுத்த முடியாத நிலைவரும் என மக்கள் கூறுகின்றனர். இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை இத்தருணத்தில் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த வருடம், ஏப்ரல் மாதம் “மயிலிட்டி பகுதியில் ஆயுதக் கிடங்கு இருக்கின்றது, அதனை மாற்றவேண்டியுள்ள காரணத்தினால்தான் குறித்த பகுதியை விடுவிக்க காலம் தாமதிக்கின்றீர்களா”? என முன்னாள் இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

எனினும் “அவ்வாறு கூறப்படுவது பொய்யான கதையாகும், மயிலிட்டியில் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் போலியான தகவல்” என முன்னாள் இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா மறுத்திருந்தார். இதனால் கூட்டமைப்பினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுவது அனைத்துத் தரப்பினரிடத்திலும் சற்று விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, மயிலிட்டியில் ஆயுதம் இருந்தமை உண்மை என்ற விடயம் வெளிப்பட்டுள்ளதுடன், கூட்டமைபபினரிடம் இராணுவத்தளபதி கூறியது பொய் என்பதும் வெளிப்பட்டுள்ளது. இதன்மூலம், இராணுவத்தினரின் ஏமாற்றுவித்தையும், தமிழர் தரப்பினரை ஏமாற்ற இராணுவத்தினர் பின்பற்றும் நரித்தந்திரமும் வெளிப்பட்டுள்ளது என்பதும் உண்மையே. தமிழர்களை காலம் காலமாக இராணுவத்தினர் அழகாக ஏமாற்றுவதற்கு இது ஒன்றும் புதிய ஆதாரமல்ல, இதற்கு முன்னரும்கூட இது பரவலாக இடம்பெற்றுள்ளது.

இதனை துள்ளியமாக விளக்க வேண்டும் என்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பொறுப்பாளராக இருந்து, பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த சிவகாமி என்ற இயற்பெயரைக்கொண்ட தமிழினி ஜெயக்குமரன் அவர்கள் விபரித்த வரிகளைக் குறிப்பிட முடியும். அவர் எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில் என்ற புத்தகத்தில் சரணடைவும் சிறைச்சாலையும் என்ற பகுதியில் அவரது சரணடைவினையும் அவருக்கான விசாரணைகள் இடம்பெற்றதையும் விபரிக்கும்போது ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார் தான் விசாரிக்கப்படும்போது ஒரு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தன்னிடம் தமிழில் பேசியதாகவும், அவரைக்கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டிருப்பார்.

அதாவது, யுத்தத்தின்போது சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு, ஒரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக அந்த இராணுவ அதிகாரி சென்றிருந்ததாகவும், புலிகளின் முக்கிய உறுப்பினர்களோடு சகஜமாக பழகியதாவும் குறிப்பிட்டிருப்பார். மேலும், அந்த இராணுவ புலனாய்வு அதிகாரி புலிகளின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கண்ணில் மண்னைத்தூவி புலிகளின் கோட்டைக்குள் வலம் வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார்.

இவ்வாறு புலிகள் இருந்த காலத்திலேயே இலங்கை இராணுவத்தினர் அவர்களது நரித்தந்திரத்தைப் பயன்படுத்த தவறவில்லை என்பதற்கும், இராணுவத்தினர் ஏமாற்றுபவர்களின் வல்லவர்கள் என்பதற்கும் இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு, காலம் காலமாக இலங்கை பேரினவாதிகள் தமிழர்களை ஏமாற்றவும், தந்திரமாக செயற்பட்டு அவர்களை சிக்க வைக்கவும் வல்லவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.

எனினும், இராணுவத்தினர் மாத்திரமல்ல நல்லாட்சி எனும் போர்வைக்குள் தன்னைப்பாதுகாத்துக் கொண்டிருக்கும் எமது ஆட்சியாளர்களும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களே. மேலும், ஏமாற்றப்படுபவர்கள் என்றும் ஏமாளியாக இருக்க மாட்டார்கள், ஒரு கணம் அவர்கள் விழித்துக்கொண்டால் ஏமாற்றுபவர்களின் கதி கேள்விக்குள்ளாகும் என்பதை இலங்கை இராணுவத்தினர், ஆட்சியாளர்களும் மறந்தனர்போலும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top