ரணில்தான் வேண்டும்: சம்பந்தன் விடாபிடி, கூட்டமைப்புக்குள் சலசலப்பு .

பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கயைில்லா பிரேரணையை தோற்கடித்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இரா. சம்பந்தன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவெடுப்பதற்கு இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது பிரேரணை எதிர்க்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆரம்பம் முதல் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் சம்பந்தனின் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், இந்த விடயத்தில் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கா விட்டால் அது தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ரணிலை ஆதரிப்பது என்ற முடிவில் உறுதியாகவும், விடாபிடியாகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கூட்டமைப்பின் தலைவரினது முடிவால் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.