லண்டனில் இருந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய மைத்திரி .

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கிய நாடுகளின் அரச தலைவர்களுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் மேற்கொள்ளாது நாடு திரும்பியுள்ளார். பொதுநலவாய மாநாடு லண்டனில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் கடந்த 15ம் திகதி லண்டன் பயணமாகியிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் பிரித்தானிய பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பார்த்திருந்தார். எனினும், அவ்வாறான எந்தவொரு சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய மாநாட்டுக்கான அதிகாரபூர்வ வரவேற்பின் போது, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் சம்பிரதாயமாக ஜனாதிபதி கைகுலுக்கிக் கொண்டார். எனினும், எந்த தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்தவில்லை. இந்த மாநாட்டின் போது மைத்திரிக்கு அருகே தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா அமர்ந்திருந்தார். அவருடனும் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது