வடகொரியா மீதான அழுத்தங்கள் தொடரும்: டொனால்டு டிரம்ப் .

வடகொரியாவின் மீது அமெரிக்கா தந்திருக்கும் அழுத்தங்களை மேலும் தொடரப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஆண்டாண்டு காலமாக இருந்த பகை விலகியது என்பதை உலகுக்கு காட்டிக் கொள்வதற்காக 65 வருடங்களுக்குப் பின் வடகொரிய தென் கொரிய எல்லைகளை தாண்டிய இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
மீண்டும் அணு ஆயுத சோதனை நடைபெறப் போவதில்லை என்று வடகொரிய ஜனாதிபதி உறுதி தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அதை தொடர்ந்து இந்த மாநாட்டுக்கு வரவேற்பு தெரிவித்த தென்கொரிய ஊடகங்கள், இந்த மாநாட்டின் போது அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான உறுதி எதுவும் வடகொரிய ஜனாதிபதியிடம் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளன.
ஆகவே வடகொரியாவை இந்த விஷயத்தில் சந்தேகமாக பார்க்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் , தனக்கும் வடகொரிய ஜனாதிபதிக்கும் ஒருவேளை சந்திப்பு நடந்தால் அந்த சந்திப்பில் தனக்கு முக்கியமான ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தக் கூடிய பொறுப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் வடகொரியாவுக்கு தந்திருக்கும் அழுத்தத்தை நிறுத்தப் போவதில்லை என கூறியுள்ள டிரம்ப், அணு ஆயுதங்கள் இல்லாமல் கொரியர்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு நாடாக கொரிய தீபகற்பம் மாறும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.