வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு!

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் பிரதம செயலரால் கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில மோசடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
வடக்கின் புதிய அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அமைச்சர்கள் தங்களது ஆளணியினருக்கு உள்ள வெற்றிடங்களுக்கு நியமித்தவர்களுடன் கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருந்து அவர்களது சம்பளப் பணத்தையும் பெற்றுக்கொண்டனர். அதேபோன்று, ‘பிக்கப்’ வாகனம் பயன்படுத்தாமலேயே அதற்குரிய எரிபொருள் கொடுப்பனவாக 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டனர் என்பது உள்ளிட்ட மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்ட விடயங்களை அடிப்படையாக வைத்தும் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பிரதம செயலர் அ.பத்திநாதனை பணித்திருந்தார். வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் ஊடாக இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.
சில அமைச்சர்களுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், வடக்கின் 5 அமைச்சர்களினதும் அமைச்சுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதுடன், அதற்குரிய ஆதாரங்களும் திரட்டப்பட்டன. இதனைவிட, மேலும் சில மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் தங்கள் ஆளணியில் நியமித்தவர்களில் சிலர் உரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் விசாரணைக்குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு மேலதிகமாகவும் சில கையாடல்கள் தெரியவந்துள்ளன என்று அறியமுடிகின்றது.
இரண்டு அமைச்சர்களே பாரதூரமான மோசடிகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என்று விசாரணைக் குழு தனது அறிக்கையில் கண்டறிந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலகத்துக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.