வடக்கு அரசியலில் திருப்பம்: விக்கியுடன் இணையும் புதிய கூட்டணி?

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில், அவரின் செயற்பாடுகளை கொண்டே தீர்மானிக்கப்படும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் குறித்த ஊடகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனிடம் கேள்வியெழுப்பியிருந்தது.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளதால், ஒன்றுபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் விருப்பத்தை முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும், முதலமைச்சருடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து கொள்ளுமா என்பது, அவர் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதிலேயே, தங்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அண்மையில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.