News

வடக்கு ஆளுநருக்கும், பதில் முதலமைச்சருக்கும் இடையில் கடும் முரண்பாடு .

வடமாகாண ஆளுநர் மற்றும் பதில் முதலமைச்சர் ஆகியோருக்கு இடையில் இன்று காலை கடும் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி, மாகாண கல்வி அமைச்சரும், பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் இந்த முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் ஆளுநருக்கும், பதில் முதலமைச்சருக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவிருக்கும் சிவபாதசுந்தரமும், பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக தெய்வேந்திரன் நியமிக்கப்படுவார் என்று ஆளுநரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என முரண்பட்டார். அத்துடன், இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு இந்த நியமனங்கள் தொடர்பிலும் பேசியுள்ளார்.

இந்நிலையில், கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாது போனால் அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு முதலமைச்சர் தொலைபேசியிலேயே கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றத்தை இடைநிறுத்திவைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதனால் மாற்றல் கடிதங்களை வழங்குவதை ஆளுநர் ஒத்திவைத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top