News

விக்கியின் புதிய முடிவு! சம்பந்தனின் எதிர்காலம்? சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் கொழும்பு அரசியல்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை. அது நீடிக்கும் வகையில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் பதவி விடயம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் வரை அரசியலில் தொங்கிக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் தமிழ் தரப்பில் இருந்து அதிகரித்து வருகின்றன. இந்த விடயம் குறித்து சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை சரிவர பயன்படுத்த வில்லை என்பது பல அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இதனை உற்று நோக்கி ஆராய வேண்டும்.

உண்மையில் எதிர்கட்சி தலைவர் என்பவர் தமிழ் மற்றும் சிங்களவர்களுக்கும் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும். இவரினால் தமிழ் தரப்புகளை கூட திருப்திப்படுத்த முடியாத நிலையில் எப்படி ஒரு பொதுவான தலைவராக செயற்பட முடியும் என்பதும் அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது. இதனால்தான், தமிழ் தரப்புகளே இவருக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன், “புது அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், சம்பந்தன் இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தல் நலம். அப்புறமும் அது தொடர்ந்தால் அது பக்க வாத்திய ஊதல்தான். ஈழத்தை கைவிட்டு ஒரே நாட்டு கொள்கையை சம்பந்தன் ஏற்றது சிங்கள தேசத்துக்கு முக்கியமில்லை போலும்.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தில் இருந்து எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை தொடர்ந்தால், இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு 38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க் கட்சி தலைவராக இலங்கையில் வந்திருந்தமை தமிழர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேளையில், எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கத்துக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக ஆகியமை தன்நம்பிக்கையை தமிழர்களுக்குள் புகுத்தியிறுந்தது.

எனினும், நடைமுறையில் இவை அத்தனைத்தும் தகர்த்து எரியப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறினால், ஒரு அமைச்சருக்கு நிகரான அதிகாரமும் எதிர்க் கட்சி தலைவருக்கு உண்டு. இதேவேளை, கூட்டு எதிரணியினர் முன்வைத்துள்ள குற்றச் சாட்டையும் ஏற்று கொள்ள முடியாது. காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் அவர் தலையிட்டு தீர்வு கண்டுள்ளார். காணாமல்போனோர் விவகாரம், முன்னாள் போராளிகளின் விடயம் என்று தமிழருக்கு செய்ய வேண்டியது எண்ணிலடகாதவை.

இரா.சம்பந்தன் அருகில் உள்ள நாடான இந்தியாவிற்கு அரசியல் விடயம் குறித்து ஆலோசனைகள் நடாத்துவதற்கு விஜயம் செய்ததைவிடவும், மருத்துவ தேவைகளுக்காக இந்தியா சென்றதுதான் அதிகம் என்று கூறலாம். முன்னாள் எதிர்க்கட்சி தலைவருடன் சம்பந்தனை ஒப்பிட்டு பார்த்தால் அவரின் சேவைகள் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூர்த் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றார்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற அமிர்தலிங்கம் மரணிக்கும் வரை பாராளுமன்ற அரசியல்வாதியாகவே காலத்தை நகர்த்தினார். அமிர்தலிங்கத்தை 1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அதுவரையும் பொதுவான ஒரு எதிர்க்கட்சி தலைவராகவே அவரின் சாதனைகள் தொடர்ந்தது, தொகுதிவாரி தேர்தல் முறையில் இருந்து விகிதாசார தேர்தல் முறையை கொண்டு வந்தார். இவ்வாறு, ஒரு பொதுவான எதிர்க் கட்சியின் தலைவாரக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினால் செயற்பட முடிந்ததாக இருந்தால் ஏன் இரா.சம்பந்தனால் முடியவில்லை என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கேள்வியாக உள்ளது.

உண்மையில் கூட்டமைப்பு தலைவர் என்ற அடிப்படையிலேயே அவர் அரசமைப்பு வழிகாட்டல் குழுவில் இருக்கிறார். இனப்பிரச்சினை தீர்வுக்கான வழித்தேடல் என்ற அடிப்படையில்தான் அவர் எதிர்கட்சி தலைவர் பதவி அமர்த்தப்பட்டார். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் புது அரசியலமைப்பு பணிகள் ஆரம்பமாக வேண்டும். பலர் குற்றம் கூறுவதைப்போல், முழு நாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவராக செயற்படாவிட்டாலும் கூட, தேசிய நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகியவை பாற்பட்ட தனது நல்ல செய்தியை கூட தென்னிலங்கை புரிந்துக்கொள்ளாததைப்பற்றி சம்பந்தன் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. சில அதி தீவிரவாத தமிழ் தரப்புகள் மத்தியில் இருந்து கடும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் சம்பந்தனின் நியாயமான கோரிக்கைகள்கூட கணக்கில் எடுக்கப்படாவிட்டால், இந்நாடு மீண்டும் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும். இந்த நிலையில் எதையும் எதிர்க்க தயார் என்று சம்பந்தன் சவால் விடுத்துள்ளார். கொழும்பு அரசியலில் மற்றொரு சுவாரஸ்யம் என்ன என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்கள் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கும் தமிழ் தரப்புகளில் இருந்து பச்சை கொடி காட்ட ஆரம்பித்துள்ளனர். வடக்கு முதல்வரின் திடீர் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்காலமும் அடங்கியுள்ளது. வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்க ஈபிஆர்எல்எப் தலைவர் முன்வந்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்கினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைப்பாடுகளால் கூட்டமைப்பு செய்வதறியாது தடுமாறுவதாக கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று தமிழ் தரப்புகளும், கூட்டு எதிரணியினரும் கூறி வரும் நிலையில் வடக்கு முதல்வர் அடுத்த கட்ட அரசியல் காய்நர்வை நகர்த்தியுள்ளார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. முதலமைச்சர் கூட்டமைப்பின் சார்பில் வந்த முதலமைச்சராகவும், கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர். ஆனால் கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைகளுடன் இணங்கி செயற்பட இயலாது என்பதை முதலமைச்சருடைய பல உரைகளில் வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படியான நிலையில் தற்போது தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார். தற்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் தமிழ் மக்களின் மத்தியில் அதிர்ப்பதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி செயற்பட போகிறார்? எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேர போகிறார்கள்? என்பதும் முக்கியமான விடயமாகும். பொருத்திருந்து பார்ப்போம் முதல்வரின் முடிவுகள் கூட்டமைப்பின் எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானிக்கும் என்று…

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top