News

விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும்! – சிவாஜிலிங்கம்



வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் சாதகமாகப் பரீசீலிக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தத் தமக்கு உடன்பாடில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல்கள் இடம்பெறவுள்ள சூழலில் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவதெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்பீடம் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவதென இதுவரை கூடி ஆராயாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாகவேயுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப முதலமைச்சர் வேட்பாளர்களும், ஏனைய வேட்பாளர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கட்சிகளின் கூட்டு அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top