News

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் சிவாஜி!

தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று வடமாகாண சபையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம். நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களோ தெரியாது.

நாடாளுமன்றில் இந்த பிரச்சினை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன தமிழீழம் மலர வேண்டுமா? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதுக்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதேவேளை, இந்த அமர்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக பௌத்தர்களே இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

“குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக பௌத்தர்களே இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. போர்க் காலத்துக்கு முன் முல்லைத்தீவில் ஒரு விகாரையும் காணப்படவில்லை. இப்போது 11 விகாரைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டி காட்டுகின்றன. கொக்கிளாயில் இராணுவத்தினரின் துணையோடு தமிழ் மக்களின் காணிகளிலே, அம்மன் கோவில் இருந்த இடத்திலே, தற்போது பௌத்த விகாரை கட்டப்படுகின்றன. நாயாற்றுப்பகுதியிலும் பிள்ளையார் சிலைக்கு அருகில் விகாரை அமைக்கப்படுகின்றது. அதற்கு முன்பாக இராணுவ முகாம் இருக்கின்றது. இவை எல்லாம் பாரிய குடியேற்றத்துக்கான ஆரம்ப வேலைகளாக கருத முடிகிறது” என தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top