News

விலகிய 16 சு.க எம்.பிக்கள் அரசில் இணைந்தால் உரிய இடம் பெற்றுக் கொடுப்போம்

அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற 16 உறுப்பினர்களும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்குரிய இடத்தைப் பெற்றுத் தருவதற்காக தாங்கள் போராடத் தயாரென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களை தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதற்கும் 16 உறுப்பினர்களை பாராளுமன்றத்தின் எதிரணியில் அமர்ந்து தனிக்குழுவாக செயற்படுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண சுதந்திரம் வழங்கியுள்ளபோதும் மேற்படி 39 உறுப்பினர்களும் ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் மேம்பாட்டுக்காக உழைப்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் மொட்டுக் கட்சியுடன் இணையாமல் பாராளுமன்றத்தில் தனித்தே செயற்படப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அவர்களை மீண்டும் அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்துள்ளோம். எனினும் இது தொடர்பில் 16 உறுப்பினர்களுமே உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றுள்ளனர். அவர்கள் தாமாகவே விலகிச் சென்றுள்ளனரே தவிர அவர்களை எவரும் விலக்கவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம். அவர்கள் அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கான இடத்தைப் பெற்றுத் தருவதற்காக அரசாங்கத் தரப்பிலுள்ள 23 பேரும் போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை 23 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கட்சிக் கொள்கையை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top