News

வெளிநாடுகளில் சாதனைகளை குவிக்கும் ஈழத்தமிழர்கள்! தமிழ் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் .

“போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்ற போது, அவ்வாறான நிலைமைகளில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு உதவக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்பட வேண்டும்.” இலங்கையில் இருந்து நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற 23 வயதுடைய ஹம்சிகா பிரேம்குமார் என்ற யுவதியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் நடைபெறும் “தமிழ்3 இன் தமிழர் விருது” அனைவராலும் அறியப்பட்ட விருது வழங்கும் வைபவமாக விளங்குகின்றது. அந்த வகையில் 2018 இற்கான “தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது” வழங்கும் வைபவம் ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இந்த விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது.

இம்முறை ஊடகவியலாளர் சரவணன் நடராசா தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான “இளைய ஆளுமையாளர்” மூவரைத் தெரிவு செய்துள்ளனர். இதில் ரீற்றா பரமலிங்கம், ஈழத்து பெண்ணான ஹம்சிகா பிரேம்குமார், திவ்யா கைலாசபிள்ளை மூவருக்கு “தமிழ்3 இன் தமிழர் விருது” வழங்கப்பட்டுள்ளது.

ரீற்றா பரமலிங்கம்..

பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதலாவது நோர்வே மொழியலமைந்த நாவலைப் படைத்துள்ளார். உன்னோடு வரவிடு, நோர்வே பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களுக்கான பரிசுக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த ரீற்றா, “எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள் தான் எமது கதைகளைக் கூறுவார்கள்” என்றார்.

திவ்யா கைலாசபிள்ளை..

மாற்றுத்திறனாளியும் ஓவியருமாகிய திவ்யா கைலாசபிள்ளை வழமையிலும் விட இவ்வாண்டு மக்களின் கவனத்தினையும் கரவொலியினையும் பெற்றார். திவ்யா கைலாசபிள்ளையின் விடாமுயற்சியினை நடுவர்குழு முன்னிலைபடுத்தியிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த திவ்யா கைலாசபிள்ளை “தனக்கு ஊக்குவிப்புத் தருகின்ற பெற்றோருக்கும் நல்ல நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஈழத்து பெண்ணான ஹம்சிகா பிரேம்குமார்,

போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்ற போது, அவ்வாறான நிலைமகளில் வாழும் ஏனைய சமூகங்களிற்கும் உதவக்கூடியதான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்றார். தமிழ் இளையோர் அமைப்பில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹம்சிகா மருத்துவ பீடத்தில் இரண்டாவது ஆண்டு மாணவியாக இருக்கின்றார். இவர் அபிவிருத்தி சார்ந்த மேற்படிப்பையும் தொடர்கின்றார்.

நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவியாகவும் செயற்படுகின்றார். பெர்கன் செஞ்சிலுவை அமைப்பு, நோர்வே புற்றுநோய் சமுதாயம், மற்றும் SOS குழந்தைகளின் கிராமங்கள் போன்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றார். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் தமிழ் இளையோர்கள் தமது துறைகளைத் தெரிவுசெய்யக் கூடாது என்றார். தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க உகந்த துறையினை அவர்களே தீர்மானிக்க வல்லவர்களாக வளர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹம்சிகா பிரேம்குமார் கடந்து வந்த பாதை…

இலங்கையில் இருந்து 2002ஆம் ஆண்டு ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதியே ஹம்சிகா பிரேம்குமார். இலங்கையில் இடம்பெற்ற தனது தந்தையாரை இழந்த ஹம்சிகா தனது தாயாருடன் புலம்பெயர்ந்தவர். “இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் வாழ்வதற்கே பயமாக இருந்தது. மருத்துவமனையிலோ, பாடசாலைகளிலோ பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அச்ச நிலை நிலவியது. மேலும், ஒன்பது வயதை அடைந்த போது, குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.” என ஈழத்தமிழச்சியான ஹம்சிகா அண்மையில் தமது கருத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top