Canada

கனடா பிரதமரின் அகதிகள் கொள்கையே காரணம்: மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வாக்குமூலம் .

கனடாவின் கியூபெக் நகரின் மசூதியில் தாக்குதல் நிகழ்த்திய இளைஞன் கனடா பிரதமரின் அகதிகள் கொள்கைதான் தன்னைக் கொலை செய்யத் தூண்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். 28 வயதான அலெக்சாண்ட் பிசோனேட் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கியூபெக்கிலுள்ள இஸ்லாமிய கலாச்சார மையம் ஒன்றில் திடீரென்று நுழைந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான்.

இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர், நேற்று அவன் அளித்த பொலிஸ் வாக்குமூல வீடியோ ஒன்றை நீதிபதிகள் பார்வையிட்டனர். அந்த வாக்குமூலத்தில் அலெக்சாண்ட் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலும் 2016 ஆம் ஆண்டு பிரான்சிலும் நிகழ்த்தப்பட்டது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் கனடாவில் மீண்டும் நிகழ்த்தப்படலாம் என்று அஞ்சியதாகவும், முன் தினம் கனடா பிரதமரின் உரையை தான் தொலைகாட்சியில் கண்டதாகவும் அதனால் தான் தாக்குதல்கள் நிகழ்த்தியதாகவும் தெரிவித்தான்.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஏழு நாடுகளின் மக்கள் அமெரிக்கா வருவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, கனடா பிரதமர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் எந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் அவர்களை கனடா வரவேற்கிறது என்று கூறியிருந்தார்.

அந்த பேட்டியைக் கண்டதும் இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளும் கனடாவுக்கு வந்து விடுவார்கள், அவர்கள் தன்னையும் தன் பெற்றோரையும் கொன்று விடுவார்கள் என்று அஞ்சியதாகவும், அதனால் தான் எதையாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் தற்கொலை செய்யக் கூட முடிவெடுத்ததாகவும் அவன் தெரிவித்தான்.

அதனாலேயே அவன் மசூதியின்மீது தாக்குதல் நிகழ்த்தியதாகத் தெரிவித்தான். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி, கனடா பிரதமர் ட்ரூடோ ட்விட்டரில் ”நீங்கள் எந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, உங்களை கனடா நாட்டவர்கள் வரவேற்பார்கள்” என்று ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். அந்த செய்தி 768,000 ட்விட்டர் பயனர்களால் 418,000 முறை மறு ட்வீட் செய்யப்பட்டிருந்தது, ஏராளமான பத்திரிகைகள் அதை செய்தியாக வெளியிட்டிருந்தன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top