அணு ஆயுத சோதனை கைவிட்டதற்கான காரணத்தை கூறிய வடகொரியா .

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதம் அற்றதாக ஆக்க வேண்டும் என்ற உண்மையான காரணங்களுக்காகவே அணு ஆயுத சோதனையை கைவிட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலகை மிரட்டி வந்த வடகொரியா சமீபத்தில் அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக அறிவித்தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக தற்போது உள்ள பொம்பியோ, அந்தப் பொறுப்புக்கு வருமுன் ஜனாதிபதி டிரம்பின் பிரதிநிதியாக வடகொரியா சென்று கிம் ஜாங் உன்னுடன் பேச்சு நடத்தினார். அந்த பேச்சு வார்த்தை நடந்த சில தினங்களுக்கு பின்பு தான் வடகொரியா அணு ஆயுத சோதனை குறித்த முடிவை அறிவித்தது.
அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே வடகொரியா அணுஆயுத ஒழிப்புக்கு இணங்கியதாக அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறி வரும் நிலையில், வடகொரியா அமெரிக்காவின் அழுத்திற்காக நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை என கூறியுள்ளது.
கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதம் அற்றதாக ஆக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை தங்களுக்கு உள்ளதாகவும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியது போன்று ஒரு தோற்றத்தை அமெரிக்கா உண்டாக்குவதாகவும் வடகொரியா கூறியுள்ளது.