India

ஆட்சியை முழுமையாக முடிக்கவில்லை மூன்றுமுறை முதல்வராகியும் ராசியில்லாத எடியூரப்பா….

தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா, கர்நாடக மாநில முதல்வராக மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றார். பெரும்பான்மை இல்லாமல் அவர் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீ திமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. வெறும் 104 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாஜக கேட்ட அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது். பெரும்பான்மைக்கு தேவையான 112 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இம்முறையாவது எடியூரப்பாவின் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே 7 நாட்களில் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்துள்ளது. அப்போது எடியூரப்பா ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர் குமாரசாமி. கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார். 20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததார். இதனால் கூட்டணியில் விரிசல் விழுந்தது. பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது. பின்னர் 2008 மே 30 ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார். இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்தநிலையில் 2011 ஜூலை 31 ம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார். 3 ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார். ஆக இதற்கு முன்பு இரண்டு முறையும் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா தனது பதவிக்காலத்தை ஒரு முறை கூட முழுமையாக அனுபவிக்கவில்லை. இம்முறையும் அது மீண்டும் அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா 3 நாட்கள் முதல்வராக இருந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top