ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.
இந்நகரில் உள்ள சுங்கத்துறை நிதி அலுவலகம் அருகே இன்று பிற்பகல் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி மனித வெடிகுண்டாக வெடித்து சிதறினான். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இன்று நடைபெற்ற மேலும் மூன்று தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.