ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடுத்தடுத்து தாக்குதல் – 14 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 14 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #AfghanTaliban #AfghanistanAttack
ஆப்கானிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகள் வசம் உள்ள சில இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு காஸ்னி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இன்றும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், தி யாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி, ரிசர்வ் போலீஸ் கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். ஜகாத்து மாவட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 20-க்கும் அதிகம் இருக்கும் என மாகாண கவுன்சில் தலைவர் கூறியிருக்கிறார்.
மேலும் தி யாக் மாவட்டத்தின் பல்வேறு காவல் சோதனை சாவடிகளையும் பயங்கரவாதிகள் தகர்த்துள்ளனர். ஜகாத்து மாவட்ட தலைமையகம் மற்றும் சோதனைச் சாவடிகளை கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.