ஆப்கானிஸ்தானில் ராக்கெட் வீச்சில் 50 தலீபான் தளபதிகள் கொன்று குவிப்பு…
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை நேரடி சமரச பேச்சுக்கு வருமாறு அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்தார்.
ஆனால் அந்த அழைப்பை தலீபான் பயங்கரவாதிகள் ஏற்காமல், தொடர்ந்து ராணுவத்தையும், போலீசையும் குறி வைத்து அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகளும், ஆப்கானிஸ்தான் ராணுவமும் வரிந்து கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்துகின்றன.
இந்தநிலையில் அங்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் முசா காலா மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி தலீபான் தளபதிகள் கூட்டம் நடப்பதாக அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததாகவும், உடனடியாக அந்த இடத்தை குறிவைத்து தொடர்ந்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடைபெற்றதாகவும், அதில் தலீபான் தளபதிகள் 50 பேர் பலியாகி விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் மார்ட்டின் டோனல் கூறும்போது, “தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இது அவர்களுக்கு விழுந்த மிகப்பெரும் அடி” என்று குறிப்பிட்டார்.
ஆனால் இந்த தாக்குதல்களை தலீபான்கள் மறுத்து உள்ளனர்.
இது பற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அகமதி விடுத்து உள்ள அறிக்கையில், “இது தவறான பிரசாரம். இந்த தாக்குதலில் முசா காலா பகுதியில் 2 வீடுகள்தான் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம், மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும்” என்று கூறப்பட்டு உள்ளது.
இதற்கு இடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்துறை அமைச்சக அலுவலக கட்டிடத்தின் அருகே நேற்று துப்பாக்கிச்சண்டையும், குண்டு வெடிப்புகளும் நடந்ததாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் இந்த தாக்குதல்களில் உயிர்ப்பலி உண்டா என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை.
இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஜிப் டேனிஷ் கூறும்போது, “உள்துறை அமைச்சக கட்டிடத்தின் சோதனைசாவடியில் துப்பாக்கிச்சண்டையும், குண்டுவெடிப்புகளும் நடந்து உள்ளதை உறுதி செய்கிறோம்” என குறிப்பிட்டார்.
காபூல் நகரை ஒரு பக்கம் தலீபான் பயங்கரவாதிகளும், மற்றொருபுறம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் குறிவைத்து தாக்குவது அங்கு வசித்து வருகிற அப்பாவி மக்களுக்கு பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அதே நேரத்தில் போலீசாரும், படைகளும் அப்பாவி மக்களை காப்பதற்கு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.