முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய வடமாகாணம் முழுவதும் ஊர்வலமாக சென்ற நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்ததையடுத்து,
இன்று காலை 11 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, பொதுச்சுடரினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் தனது தாய், தந்தை இருவரையும் இழந்த யுவதி கேசவன் விஜிதாவிடம் கையளிக்கஅவர் பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சமநேரத்தில் சுடரேற்றிஅஞ்சலி செலுத்தினர் .
இதையடுத்து கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் படையெடுத்து வந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடனும், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமது உறவுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் படையெடுத்து வந்ததுடன், யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவர்களின் பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்தடைந்தது.
இந்த நிலையில் வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பொதுமக்கள், மக்கள்பிரதிதிகள் மற்றும் மதகுருமார் என ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு உணர்வு எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கும் போது வெயில் மக்களை சுட்டெரிக்கும்.ஆனால் இம்முறையோ இயற்கையும் தனது வழக்கத்தை மாற்றியுள்ளதாக தோன்றுகின்றது.
சுட்டெரிக்கும் சூரியன் கூட இந்த மக்களைக் கண்டு மனமிறங்கி தனது அக்கினிக்சுவாலைகளை குறைத்துள்ளதாகவே தோன்றுகின்றது.