News

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது.

ஜனாதிபதியின் உரையில் யாப்பு திருத்தம் பற்றி குறிப்பிடாதது குறித்து கவலை தெரிவிப்பு

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கம் தொடர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தீர்வுக்கான நிரந்தர வழிகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

புதிய யாப்பு திருத்த முன்னெடுப்பு குறித்தோ இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் எதுவுமே கூறாதது கவலை தருவதாக குறிப்பிட்ட அமைச்சர்; வடக்கு,கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினையும் தீர்க்கப்படாதிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் சாதனைகள் பற்றி ஜனாதிபதி சபையில் பேசினார்.இந்த நிலையில் சிறுபான்மை இனங்களின் வேதனைகளை பற்றி பேச வேண்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அதற்கான அணுகுமுறைகள் அடிப்படைகள் பற்றியோ நழுவல் போக்குடனே சொல்லப்பட்டதாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஒருசில இடங்களில் மாத்திரம் சில கருத்துகளை ஜனாதிபதி கூறியிருந்தார். தமிழ் மக்களின் சமஉரிமையை அடிப்படையாகக் கொண்ட அபிலாசைகளை ஏற்றுக் கொள்வதாகவும் முஸ்லிங்களின் நலன்கள் சமூக கலாசார தேவைகளை உறுதி செய்வதாகவும் மலையக மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், இனப்பிரச்சினைக்கு தீர்வாக எதுவும் முன்மொழியப்படவில்லை.

அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழு பல தடவைகள் கூடி பல விடயங்கள் குறித்து ஆராய்ந்தது. அதன் எதிர்காலம் என்ன? வழிநடத்தில் குழுவின் அறிக்கை குறித்து விவாதம் நடத்த திகதி ஒதுக்கப்படவில்லை.

தேசிய அரசாங்கம் உருவாக மு.கா, த.தே.கூ போன்ற பல கட்சிகள் பங்களித்தன.கட்டம் கட்டமாக அரசியலமைப்பு திருத்தப்படப் ​போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் ஜே.வி.பி பிரேரணை முன்வைக்க தயாராகி வருவதாக அறிகிறோம்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் போன்றே முஸ்லிம்களும் காணிகளை இழந்துள்ளனர். இராணுவம் போன்றே வன இலாகா இடமாக பிரகடனப்படுத்தப்பட்டு பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

85 வீதமான இடங்களை விடுவித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். இராணுவத்தின் பிடியில் இருந்த காணிகள் மாத்திரமன்றி அரசாங்க நிறுவனங்கள் கைப்பற்றி பொதுமக்களின் காணிகளும் உள்ளன.

இது தவிர தமிழ்−முஸ்லிம் காணி பிணக்குகளும் இருக்கின்றன.அவற்றை எமக்குள் பேசி தீர்க்க வேண்டும்.காணிகள் கைப்பற்றப்பட்டதால் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தோப்பூரில் பத்து வீட்டுத் திட்ட காணியில் படையினர் முகாம் அமைத்துள்ளனர். சில பகுதிகளில் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டு மீன்பிடிக்க முடியாமல் வேலி இடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதார தேவைக்காக அவர்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். 85 வீதம் காணிகள் விடுவிக்கப்பட்டன என்பது தொடர்பான உண்மைத் தன்மை கேள்விக்குறியாக உள்ளது.

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் இனிமேலும் இழுத்தடிக்க முடியாது. தேர்தல்கள் வரும் போது அது பற்றி பேசி உத்தரவாதம் வழங்கி மக்களை நம்ப வைக்க முடியாது.

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களோடு மக்கள் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர். பேச்சு சுதந்திரம் பற்றியும் ஜனாதிபதி தனது உரையில் கூறியிருந்தார். இன்னொரு சமயத்தை அவமதித்து பேசுவோர் தொடர்பில் தண்டனை சட்டக் ​கோவையில் திருத்தம் செய்ய வேண்டும். வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான சட்டத்தை இனியும் இழுத்தடிக்க முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பில் சுமார் 85 கோப்புகள் உரிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் கிடப்பில் இருக்கின்றன. அனைத்து சொத்துகளும் இழந்த நிலையில் அவர்கள் எங்கு சென்று ஆதாரங்களை தேட முடியும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top